முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, 1972 ஆம் ஆண்டில் வெளியான 'பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு மு.க.முத்து நடித்த 'பூக்காரி', 'அணையா விளக்கு', 'சமையல்காரன் போன்ற படங்கள்', தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
நடிப்பில் மட்டுமல்லாமல், தனது சொந்தக் குரலில் பாடல்களை பாடி அசத்தியுள்ளார் மு.க. முத்து. பன்முகத்திறமை கொண்ட மு.க. முத்து, வயது மூப்பால் தனது 77-வது வயதில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞரின் குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் இருந்து தொடங்கிய மு.க.முத்து அவர்களின் இறுதி ஊர்வலமானது டி.டி.கே சாலை, ராஜா அண்ணாமலைபுரம், அடையார் பாலம், வழியாக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு வந்தடைந்தது.
அங்கு அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் கழகத்தினர், தோழமை கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மு.க.முத்து அவர்களின் உடல் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.