ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37) என்பவர், தனது குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்த சூழலில் அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமலா பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்த விவகாரத்தில் சிக்கிய மேலாளர் நவீன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவாகரம் தற்போது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.
சென்னை வெப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணைய அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று (ஜூலை 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது :-
"மாதவரம் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை வழக்கு தொடர்பாக சரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் நவீன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சிலர் தூக்கிட்டுக் கொள்ளும்போது காப்பாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இதுபோல பல இடங்களில் நடந்துள்ளது.
மாதவரம் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில், தங்கள் நிறுவன நிதிப்பிரிவின் கருவூல மேலாளரான நவீன் பொல்லினேனி சுமார் ரூ.44 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்தார்.
ஒரு கோடிக்கு கம்மியாக மோசடி நடைபெற்றிருந்தாலும் இணை ஆணையர் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் துணை ஆணையர் அதனை செய்யவில்லை. எனவே அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாதவரம் காவல் ஆய்வாளர் வீதி முறையை மீறி செயல்பட்டதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.44 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
நவீன் இறுதியாக எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினரை சார்ந்தவர்கள் யார் பெயரும் அந்த மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. திருமலா பால் நிறுவனத்திற்கு தற்கொலை தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக தகவல் கிடைத்தாக காவல் நிலையத்தில் முகுந்த் என்பவர் புகார் அளித்துள்ளார். நிதி மோசடி செய்ததை நவீன் ஒப்புக்கொண்டு அந்த பணத்தில் நிலம் வாங்கியதாக தெரிவித்து தற்கொலை செய்து கொண்டதாக திருமலா பால் நிறுவனத்திற்கு, நவீன் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்."