
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.3.2026) திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் 30.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தார்.
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் போன்ற பல்வேறு திட்டங்களையும், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாவட்டங்களில் பிற இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி கொண்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மருத்துவ கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 30.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இம்மருத்துமனை 1984-ஆம் ஆண்டு முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தொடங்கப்பட்டு செயல்பட்டது. பின்னர், 1.2.1999 முதல் வட்டம் சாரா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மட்டுமே சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில் 19 மாவட்டங்களில் தலா ஒரு அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்ற ஆணையின்படி, இப்பகுதி மக்களின் நலன் கருதி 28 படுக்கைகள் கொண்டதாக இருந்த வள்ளியூர் அரசு மருத்துவமனை, 200 படுக்கைகள் கொண்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, மருத்துவமனையின் புதிய கட்டடத்திற்கு 5.6.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
30.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனையில் தரைத்தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், அவசர சிகிச்சை பிரிவு (TAEI Ward), இரத்தப் பரிசோதனை பிரிவு, இரத்த சேமிப்பு கூடம், சமையலறை, சலவைக்கூடம், உடல் கூராய்வு பிரிவு, மருந்தகம் ஆகிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் CEMONC பிரிவு, மகப்பேறு அறைகள், மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, மருந்து மற்றும் தளவாடங்கள் கிடங்கும்,
இரண்டாம் தளத்தில் டயாலிஸிஸ் சிகிச்சை பிரிவு, அனைத்து உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவம், அறுவை சிகிச்சை, மனநலப்பிரிவு, முதியோருக்கான சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் கருத்தரங்க கூடமும்,
மூன்றாம் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, 4 அதிநவீன அறுவை சிக்சைக்கூடங்கள், கண்நோய்களுக்கான பிரிவு, மத்திய நுண்கிருமி நீக்கத்துறை (CSSD)
என இம்மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் என மொத்தம் 83,873 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
வள்ளியூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தால் நாங்குநேரி, இராதாபுரம், காவல்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான பெதுமக்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை சிரமமின்றி எளிதாக மேற்கொள்ள முடியும்.






