பா.ஜ.க-வின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்ற ஒரு கொத்தடிமையாகவே எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் விமர்சித்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ,”எடப்பாடி பழனிசாமியால் ஒரு கூட்டணியை உருவாக்க முடியவில்லை. இதனால் பா.ஜ.கவின் கூட்டணியில் ஒட்டிக்கொண்டனர். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை அ.தி.மு.கவின் தொண்டர்கள் கூட யாரும் விரும்பவில்லை. பா.ஜ.க கட்சி வகுப்புவாத கட்சி என்பதல் இக்கூட்டணியை அவர்கள் ஏற்கவில்லை.
தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்று பா.ஜ.க சொல்கிறது. மதுரையில் நடந்த மாநாட்டில் கூட இந்து சமய அறநிலைத்துறைக்கு எதிராக பா.ஜ.க தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்த கருத்தை எடப்பாடிப் பழனிசாமி ஏற்றுக்கொள்கிறாரா? என்பதை விளக்க வேண்டும்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக்கூடிய பெரிய கோயில்களின் வருமானம் பள்ளி - கல்லூரிகள் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை இப்போது மட்டும் அல்ல பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்நிலையில், அதிகபட்சமாக வரக்கூடிய கோயில்களின் வருமான நிதியை கல்லூரி பள்ளிகளுக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது. அதை எப்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவறு என கூற முடியும்?.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் அதிமுக பாஜகவின் முழு கொத்தடிமையாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை” என தெரிவித்துள்ளார்.