சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (5.7.2025) பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து கழிப்பறையை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான “கழிப்பறை திருவிழா 3.0” நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழிப்பறைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் டாய்லெட் ரிப்பேர் கபே வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, புகைப்பட கண்காட்சி மற்றும் அரங்கங்களை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் இணைய தளம், வடிவமைப்பு கருவிப் பெட்டி இணையதளம் (Design Tool Kit Website) ஆகியவற்றை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளியின் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சுகாதாரம் குறித்த புத்தகங்களை வெளியிட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்ளும் 150 மாணவ சுகாதார அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர் நலவாரியத்தின் சார்பில் விபத்து மரண நிவாரணத்தொகை, இயற்கை மரண நிவாரணத் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, உள்ளிட்ட நலத்திட்டங்களின் கீழ் 30 நபர்களுக்கு மொத்தம் 12,79,000 ரூபாய்கான காசோலைகளயும், தாட்கோ மூலமாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் சங்கத்திற்கு சிறு வணிகக் கடனாக 25.00 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை,
சென்னை மாநகராட்சி மற்றும் Wash Lab இணைந்து நடத்துகின்ற இந்த சர்வதேச கழிப்பறை திருவிழாவினுடைய நிறைவு நாள் நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
கழிப்பறை சுகாதாரம் தொடர்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாத காலமாக ஏராளமான நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தி இருக்கின்றீர்கள். அதற்கான நிறைவு விழாவை பல்வேறு நடவடிக்கைகளுடன் இந்த கலைவாணர் அரங்கில் கடந்த 2 நாட்களாக நடத்தி, அதில் பங்கேற்கின்ற வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி கொடுத்ததற்கு மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியினுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக கழிப்பறை சுகாதாரம் போன்ற விஷயங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அதை நாம் தவிர்த்துவிட்டு கடந்து செல்கின்றோம்.
ஆனால், நோயற்ற வாழ்வுக்கு கழிப்பறை சுகாதாரம் என்பது மிக, மிக அவசியமானது என்பதை நீங்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள். அதை உணர்ந்ததால் தான், இன்றைக்கு இந்த 2 நாள் நிகழ்ச்சி உங்களுடைய பங்கேற்போடு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதை நீங்களும் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றீர்கள்.
பள்ளி மாணவர்களிடையே கழிப்பறை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கழிப்பறை சுகாதாரம் சார்ந்து innovators and investors conclave நடத்துவது, பொதுக்கழிப்பிடங்களை மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, பள்ளிக்கு ஒரு health minister-ஐ உருவாக்குவது. கழிப்பறைகளில் ஏதாவது இடர்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக Toilet Repair Cafe Model அமைப்பது போன்ற திட்டங்களை நான் மனதார பாராட்டுகின்றேன், வரவேற்கின்றேன், வாழ்த்துகின்றேன்.
இன்றைய தினம், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அண்மையில் உருவாக்கிய தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 900 பேர் இங்கே வருகை தந்து இருக்கின்றீர்கள்.
உங்களால் தான் இன்றைக்கு தமிழ்நாடு மிகுந்த ஆரோக்கியமான ஒரு நிலையில் இருக்கின்றது. அதற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள், என்னுடைய நன்றி.
தூய்மைப் பணியாளர்கள் தான் சென்னையுடைய அன்னை, தாய் என்று நான் பல நேரங்களில் பெருமையாக குறிப்பிட்டது உண்டு. அந்த அளவுக்கு ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை பார்த்துக் கொள்வது போல, தூய்மைப் பணியாளர்கள் தான், நீங்கள் தான், சென்னையை பார்த்துக் கொள்கிறீர்கள்.
சென்னை என்கிற குழந்தை உங்களுடைய கைகளில் பத்திரமாக இருக்கின்றது. சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உங்களுடைய பணி என்பது போற்றத்தக்கது, மகத்தானது. உங்கள் பணி மட்டும் அல்ல. உங்களுடைய உள்ளமும் மிகவும் தூய்மையானது என்பதை நான் அறிவேன். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் செய்வது வெறும் தூய்மைப்பணி மட்டும் அல்ல. அது மனித குலத்துக்கே நீங்கள் செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுகின்ற கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய, நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய ஒரே இலட்சியம். அதனால் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அண்ணல் அம்பேத்கருடைய நினைவு நாளான கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி, தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக்கி அவர்களை உயர்த்த வேண்டும் என்ற உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு 100 கழிவு நீரகற்றும் வாகனத்தை மானியத்தோடு நம்முடைய முதலமைச்சர் வழங்கினார். அதுமட்டுமல்ல, நீங்கள் பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என்று அதற்கான பயிற்சியை வழங்க, தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை 50 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள்.
தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் 90 சதவீதம் மானியத்தோடு 1,000 வீடுகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இப்படி பல்வேறு திட்டங்கள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான கடன் திட்டம் போன்றவற்றை உங்களுக்காகவும், உங்களுடைய குடும்பத்தினருக்காகவும் வழங்க நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே தூய்மைப் பணியாளர்களுக்காக தாட்கோ மூலம் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டன. விபத்துக் காப்பீடு, கல்வி உதவி, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்குவது போன்ற உதவிகள் உங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
உங்களுக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நிதி உதவிக்கான காசோலைகளையும் இங்கே வழங்கி இருக்கின்றோம். கடந்த ஒரு மாதமாக நடந்த சர்வதேச கழிப்பறை திருவிழாவை தொடர்ந்து, 2 நாட்களாக, இங்கே பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நம்முடைய அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.