தமிழ்நாடு

”18,000 பேரின் உயிர்களை காப்பற்றிய 'இருதயம் காப்போம்' திட்டம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

50 மருத்துவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

”18,000 பேரின் உயிர்களை காப்பற்றிய 'இருதயம் காப்போம்' திட்டம்” :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற “மருத்துவர் தினம் 2025” நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவத்துறையில் மகத்தான பணி செய்த மருத்துவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்த துறைக்கு பல்வேறு வகைகளிலான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். 2021 ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் உருவான திட்டம் மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டம். இந்த திட்டத்தில் இதுவரை 2 கோடியே 28 இலட்சம் பேர் பயனடைந்து இன்றைக்கு United Nation Interagency Task Force Award 2024 எனும் விருது ஐ.நா மன்றத்தால் தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்டிருப்பது என்பது உலக வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான சிறப்பு. அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021 டிசம்பர் திங்களில் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சாலைகளில் விபத்துக்குள்ளானவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் ரூ.1 இலட்சம் உதவித் தொகை தந்து உயிர்களை காப்பாற்றுகின்ற ஒரு மிகச் சிறந்த திட்டம். இத்திட்டத்தில் உதவித் தொகை கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ரூ.2 இலட்சமாக உயர்த்தி தரப்பட்டு, இன்றைக்கு அதன் மூலம் உயிர் பெற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த திட்டம் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறையின் அலுவலர்கள் நம்முடைய மாநில சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலந்து பேசி இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 எனும் திட்டம் இன்றைக்கு ஒன்றிய அரசே இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இத்திட்டத்தில் முதல் 7 நாட்களுக்குள் காவல்துறையின் அறிக்கை சமர்ப்பித்தவுடன் ரூ.1.5 இலட்சம் தரப்படும் என்கின்ற திட்டத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் நமது மாநில சுகாதாரத்துறை சார்பாக முதல் 48 மணி நேரத்தில் எந்தவித விசாரணையும் இல்லாமல் உதவித் தொகை தரப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கும் ரூ.5000/- ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம் இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக அமைந்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.

அதேபோல் இன்றைக்கு இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2019 கோவிட் பாதிப்புக்கு பிறகு உயிர் பாதிப்புகள் என்பது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் கூட இந்நிகழ்வுகளுக்கு ஆராய்ச்சி செய்ய தொடங்கி இருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குக்கிராமங்கள், கிராமப் பகுதிகள் என்று அப்பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வசிக்கும் பகுதியிலேயே உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று 10,999 மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்றது. 8713 துணை சுகாதார நிலையங்களும், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் என்று 10999 மருத்துவக் கட்டமைப்புகளிலும் Loading Doses எனும் ஆஸ்பிரின், க்ளோபிடோக்ரல், அட்ரோவாஸ்டாட்டின் என்கின்ற 3 மாத்திரைகள் தந்து உடனடியாக உயிர்களை காப்பாற்றுகின்ற ஒரு மகத்தான திட்டத்தை 2023 ஜூன் திங்கள் 27 ஆம் தேதி கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தொடங்கி இருதயம் காப்போம் எனும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி இன்று வரை 18,000 த்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கிறது.

மேலும் சிறுநீரகம் பாதுகாப்போம் திட்டம், நடப்போம் நலம் பெறுவோம், பாதம் பாதுகாப்போம் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் என்று பல்வேறு சிறப்புக்குரிய திட்டங்கள் தமிழ்நாடு மருத்துவத்துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்றைக்கு உலகிற்கே மருத்துவத்திற்கு ஒரு அடையாளமாக மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதன்காரணமாக இந்தியாவிற்கு வருகின்ற உலக சுற்றுலா மருத்துவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் உயர்ந்து வருகிறது. ஒன்றிய அரசின் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டிலிருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகள் 25% பேர் மருத்துவம் பார்ப்பதற்கு தமிழ்நாட்டிற்கு செல்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ கட்டமைப்புகள்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 19 புதிய மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகளும், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் என மொத்தம் 25 இடங்களில் ஏறத்தாழ ரூ.1018 கோடி செலவில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் இந்த மருத்துவக் கட்டமைப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் திருத்தணியில் கட்டப்பட்டு இருக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 24 இடங்களில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கட்டமைப்பு மிக விரைவில் பணி நியமனங்கள் முடிக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமையும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்கள்.

அறிவிக்கப்பட்ட ஒரே வருடத்தில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையம் திறந்து வைத்தார்கள். அந்தவகையில் மீதமுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை வரும் 03.07.2025 அன்று சென்னை அடையாறில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு மருத்துவமனை பணியாளர் என 4 பணியிடங்களுடன் கூடிய நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள். மேலும் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 50 என்று அனுமதி பெற்று அதனையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரும் 03.07.2025 அன்று திறந்து வைக்க உள்ளார்கள். JICA ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ஏராளமான புதிய மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு பாராட்டு என்பது தவிர்க்க முடியாதது ஒன்று. கோவிட் காலங்களில் மருத்துவர்கள் தான் வணங்கும் தெய்வமாக கண்டறியப்பட்டார்கள். கோவிட் காலங்களில் மக்களை பாதுகாத்ததன் காரணமாக மருத்துவர்களின் சேவை அனைவருக்கும் தெய்வமாக தெரிந்தது.

கோவிட் காலங்களில் அனைவரும் அச்சமடைந்து வந்த நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோவை ESI மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட் நோயாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள். வெளியில் வந்த மாண்புமிகு முதலமைச்சரிடம் பத்திரிக்கையாளர்கள் யாருமே சந்திக்க பயப்படும் கோவிட் நோயாளர்களை எப்படி சந்திக்க சென்றீர்கள் என கேட்டதற்கு, மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பற்றி கவலைப்படாமல் எல்லா இடங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக, அவர்களுடைய சேவையை பாராட்டும் வகையில் நான் இந்த கோவிட் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு சென்று வந்தேன் என்று தெரிவித்தார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு புதிய மருத்துவக்கட்டமைப்புகள் குறிப்பாக 4 புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனைகளை திறந்து வைப்பதற்கும், 11 புதிய மருத்துவ கட்டமைப்புகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற வசதிகளும் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அடுத்த நாள் கொடைக்கானல் 19 புதிய மருத்துவக் கட்டமைப்புகளை திறந்து வைப்பது, 11 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என்கின்ற வகையில் சென்றிருந்தேன். அன்று காலையில் 21 கி.மீ நடந்தே சென்று பூம்பாறை எனும் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தேன். நான் எங்கு சென்றாலும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனைகளில் ஆய்வு செய்வது வாடிக்கை. அதனடிப்படையில் இம்மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, 2 மருத்துவர்கள் பணியில் இருந்தார்கள், 5 செவிலியர்கள் பணியில் இருந்தார்கள்.

அவர்களிடத்தில் இம்மருத்துவமனையில் எந்த வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்தபோது, பாம்புக்கடி மற்றும் நாய்க்கடி பாதிப்புகளினால் சிகிச்சை பெற்று திரும்பியவர்களிடம் அவர்களது தொலைபேசி எண்ணை பெற்று பேசினேன். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு சொன்னது இதற்கு முன்னாள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கு மருந்து கிடைக்காது, இங்கிருந்து 2 மணி நேரம் பயணம் செய்து கொடைக்கானல் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற முடியும். அல்லது 3 மணி நேரம் பயணம் செய்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி செல்ல வேண்டும். ஆனால் இப்போது எங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே மருந்து கிடைத்திருப்பது என்பது எங்களுக்கு மிகப் பெரிய வரமாக உள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பாராட்டினார்கள்.

மேலும் இருதய பாதிப்பு சிகிச்சைக்கு வந்த விவசாயிடம் பேசினோம், அவரும் இந்த மருத்துவமனையில் Loading Doses எனும் வகையில் மருந்துகள் கிடைக்கப்பெற்று நலமுடன் இருப்பதாக சொன்னார்கள். மேலும் இம்மருத்துவமனையில் பணிபுரிந்த 2 மருத்துவர்கள் ஒருவர் புதுக்கோட்டையிலிருந்தும், ஒருவர் திண்டுக்கல்லில் இருந்தும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களிடத்தில் நீங்கள் பணிபுரியும் இடத்திலிருந்து வீட்டிற்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளதா என்று கேட்டோம். அவர்களும் இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்கள். இவர்களுக்கு ரூ.87 இலட்சம் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வர இருந்த மருத்துவர்கள் குடியிருப்பில் இவர்களுக்கு ஒதுக்க ஆணைகள் தர உத்தரவிடப்பட்டது. இவர்களிடம் நீங்கள் மருத்துவர் குடியிருப்பில் தங்கி இருந்து வசதியாக பணியாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்த அத்தனை செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதனை தற்போது சொல்வதற்கான காரணம் மருத்துவர்களின் சேவை என்றைக்கும் பாராட்டுவதற்குரியது.

விருதுகள்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு ஆண்டிற்கு சிறந்த 10 மருத்துவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆட்சிக் காலத்தில் 10 என்பது போதாது, பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருமே சிறப்பு மருத்துவர்கள் தான். எனவே அந்த 10 என்பதை மாற்றி 25 ஆக உயர்த்தி விருதுகள் வழங்கப்பட்டது. எனவே கடந்த ஆட்சிக் காலத்தில் விடுப்பட்ட மருத்துவர்கள் மற்றும் தற்போது வரை கணக்கிட்டு 105 மருத்துவர்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு 25 போதாது என்கின்ற வகையில் 50 பேருக்கு சிறந்த மருத்துவர்கள் என்கின்ற விருது வழங்கப்பட உள்ளது. குறிப்பாக மருத்துவ கல்வி இயக்ககத்தில் 12 பேருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் 13 பேருக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் 12 பேருக்கும் விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் 7 பேருக்கும், இந்திய மருத்துவ சங்கம் அமைப்பில் இருந்து 3 பேருக்கும், 3 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என 50 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories