தமிழ்நாடு

தமிழ் மொழிக்கு ரூ.113.48 கோடி மட்டுமே நிதி : வெறுப்பை வெளிப்படுத்திய ஒன்றிய அரசு - ஜவாஹிருல்லா கண்டனம்!

சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மொழிக்கு ரூ.113.48 கோடி மட்டுமே நிதி : வெறுப்பை வெளிப்படுத்திய ஒன்றிய அரசு - ஜவாஹிருல்லா கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளை புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு மிதமிஞ்சிய நிதி ஒதுக்கீடு செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ரூ.147.56 கோடியை விட 17 மடங்கு அதிகமாகும் என்று  தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் பெற்ற தகவலை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற ஐந்து செம்மொழிகளுக்குச் சராசரி ஆண்டு நிதி ரூ.13.41 கோடி மட்டுமே ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இ‌‌ந்த பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

2004ல் முதன் முதலாகச் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழுக்கு, மொத்தம் ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. – இது சமஸ்கிருதம் பெற்ற தொகையை விட 22 மடங்கு குறைவு.

இந்தியாவின் மக்கட்தொகையில் 22% மக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழி பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.

சமீபத்தில் மதுரையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் மற்றும் பிற செம்மொழிகளுக்கு மொழிகளுக்கான உரிய அங்கீகாரம், நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஒன்றிய  அரசு உடனடியாக  வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories