திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவர், தேனியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்த சம்பவத்தில், தனுஷின் சகோதரர் கடத்திச் செல்லப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனிடையே, தன் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பணியிடை நீக்கம் குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை வாபஸ் பெறப்போவது இல்லை என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கு விசாரணை முடியும் வரை ஏடிஜிபி ஜெயராம் மீதான பணியிட நீக்க உத்தரவு தொடரும் என்றும், காவல்துறை பணியாளர் விதிகளின் அடிப்படையில், ஒருவர் மீது கிரிமினல் வழக்கு இருக்கும்போது, அவரை பணியில் தொடர அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
மேலும் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான ஆள் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.