எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசு, ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மேலும் தங்களது இந்துத்துவ கொள்கையை இவர்களை கொண்டு திணித்து வருகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலத்தை கடத்தி அரசு நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை போதித்து வருகிறார்கள்.
தற்போது, கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், காவிக் கொடி ஏந்திய பாரத மாதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொண்டு வந்துள்ளார். இதற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன்,”ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கான அலுவலமாகவோ, அரசியல் நடவடிக்கைகளுக்கான இடமாகவோ மாற்ற முடியாது எனத் தெரிவித்தார். ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு சவால் விடுவதாகும் என்றும் அவர் விமர்சித்தார். பாரத மாதா கையில் உள்ள கொடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொடி என்பது அனைவருக்கும் தெரியும் என்ற பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ். தனது சின்னங்களை பயன்படுத்துவதை யாரும் எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். நடைமுறைகளை ஆளுநர் மாளிகையில் பயன்படுத்துவதையும், மற்றவர்கள் மேல் திணிப்பதையும் ஏற்க முடியாது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். 1925-ல் உருவான ஆர்.எஸ்.எஸ்., சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டைதான் மேற்கொண்டதாகவும், அரசியல் சாசனம் உருவானபோது அதனையும் ஆர்.எஸ்.எஸ். எதிர்த்ததாகவும் கூறிய பினராயி விஜயன், அரசியல் சாசனத்திற்கு மாற்றாக மனு தர்மத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என 1949 நவம்பர் 30-ல் வெளியான ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.