கீழடி அகழாய்வுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய பா.ஜ.க அரசு மறுத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழர் விரோத போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அதோடு தற்போது இந்த கீழடி அகழாய்வு விவகாரம் பெருமளவு சூடு பிடித்துள்ள நிலையில், கீழடி குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஆய்வாளர் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நேற்று (ஜூன் 17) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே கீழடி விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு வேண்டுமென்றே அடக்குமுறைகளை கையாள்வதாக பலரும் விமர்சித்து வந்த நிலையில், , கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கழக மாணவரணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 18) ஆரப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று, திமுக மாணவரணி சார்பில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணிச் செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகம் பொறித்த முகமூடியை அணிந்தவாறும், கையில் ஏந்திவாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அப்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மேடையில் பேசியதாவது :-
தமிழன் முன்னேறி வரும் இடத்தில் மற்றொரு தமிழன் தான் எதிரியாக இருப்பார் என பெரியார் கூறுவார். நம்முடைய பண்பாட்டு பகைவர்களை இன எதிரிகளை நாம் நன்றாக அறிவோம் உணர்ந்திருக்கின்றோம்.
பாசிசத்தை தமிழ்நாட்டு மக்களிடையே வேரூன்ற துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக. இப்படிபட்ட பாஜக அரசை நம் மக்களிடையே தோல் உரித்து காண்பிப்பதற்காகதான் இந்த எழுச்சி மிக்க போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கீழடி என்பது நம்முடைய தொன்மையான பண்பாட்டின், நாகரிகத்தின் தாய்மடி. தெற்கு தமிழ்நாடு உலகறிய செய்து இருக்கின்ற ‘கீழடிதான் தாய்மடி’. அதனை ஒன்றிய பாஜக அரசு மண்மூடி மறைக்கின்ற செயலில் இறங்கி இருப்பதை நாம் கண்டிப்பதோடு, பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று அவர்கள் கூறும் வேதகாலம் என்பது உண்மை; சரஸ்வதி நதி ஓடியது உண்மை என்கிற புரட்டுகளை கூறுகிறார்கள். அதன் உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கீழடியின் உண்மையை மூடி மறைக்கின்ற பாஜக அரசை கண்டித்து அருமையான தீர்மானங்களை ஐயா ஆசிரியர் கி.வீரமணி நிறைவேற்றியுள்ளார்.
982 பக்க ஆய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமர்ப்பித்து இருக்கிறார். அதற்கான எந்த விதமான பதிலும் ஒன்றிய அரசு தரப்பில் வரவில்லை. அவரைப் பார்த்து ஒன்றிய அரசாங்கம் சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் அறிக்கையை திருத்தி சீர் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளது.
யார் நம்முடைய நம்பகத்தன்மையை தீர்மானிப்பது? வரலாற்றில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாத புராணக் கதைகளை வரலாறு என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிற நீங்களா எங்களுடைய நம்பகத்தன்மை கேள்வி கேட்பது!
உலக மக்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் முதலில் உழவு தொழிலையும், கடல் வாழ்வையும் முன்னெடுத்தவர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீதி அமைப்பு, வீடு அமைப்பு, நகர அமைப்பு, நாட அமைப்பு செய்தவர்கள் தமிழர்கள்.
முதல் முதலில் நாகரிகத்தோடு வாழ்ந்ததற்காக அடையாள கூறுகளோடு இருப்பவர்கள் தமிழர்கள்.
நாடாளுமன்ற விதி 377 கீழ் கேள்வி எழுப்பினால் அதற்கு கட்டாயம் பதில் தர வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை அதற்கான எந்த விதமான பதில் தரவில்லை” என்றார்.