சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உள்ளே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டபேரவையில் 978 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடங்களை குளிரூட்டப்பட்டு, புதிய உபகரணங்கள் வாங்கி பொருத்திடவும், நவீன முறையில் சீரமைத்தல் பணிகளுக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினைச் சேர்ந்த AGB வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் சீரமைக்கப்பட்டு குளிர்சாதன வசதிகளுடன் 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டது. மேலும், இதற்கான ரப்பர் தரையமைப்பு, மற்றும் நவீன உபகரணங்கள் வாங்கி பொருத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வேளச்சேரி AGB நீச்சல் குளம் வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் முதலாவதாக நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த பிறகு வேளச்சேரி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுபவர்களையும் பார்வையிட்டார். வேளச்சேரி நீச்சல் குளம் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருப்பவர்கள் என்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.