தமிழ்நாடு

அற்பப் புத்தியில் பொய்களை உருட்டி திரட்டி அறிக்கை வெளியிடும் பழனிசாமி : அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கு!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

அற்பப் புத்தியில் பொய்களை உருட்டி திரட்டி அறிக்கை  வெளியிடும் பழனிசாமி : அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாள்தோறும் பல பெயர்களைச் சூட்டிய விளம்பர ஆட்சியைத்தான் அதிமுக நடத்தியது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்திலேயே தன் பெயரைப் பதித்த பழனிசாமி விளம்பரம் பற்றி எல்லாம் பேசலாமா?. பழனிசாமிக்கு எத்தனை உண்மைகளைச் சொன்னாலும் பச்சைப் பொய் பேசும் பழக்கம் மட்டும் மாறப் போவதில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

"மக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக் கூட பல பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு’’ என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார்.

அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதற்காகத் திராவிட மாடல் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டு தூக்கமிழந்து திரியும் பச்சைப் பொய் பழனிசாமி, திமுக அரசின் மீது எப்படியாவது அவதூறு பரப்ப வேண்டும் எனும் அற்பப் புத்தியில் பொய்களை உருட்டி, திரட்டி அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு முன்பு கொஞ்சமும் யோசிக்க மாட்டீர்களா பழனிசாமி. அதிமுக ஆட்சியில் மக்கள் குறை தீர்ப்பு திட்டங்களின் லட்சணம் பற்றியெல்லாம் தெரியாமல் ஏன் அறிக்கை என்ற பெயரில் தினமும் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

மாவட்டங்களில் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள், மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்டக் குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா கால் சென்டர் என்று நாள்தோறும் பல பெயர்களைச் சூட்டிய விளம்பர ஆட்சியைத்தான் அதிமுக நடத்தியது.

இவையெல்லாம் போதாது என்று ’முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை 2019 ஆகஸ்ட் 19-ம் தேதி கொண்டு வந்தார் அன்றை முதல்வர் பழனிசாமி. அதாவது சரியாக நடந்ததா? என்றால் இல்லை. அதன்பிறகு அதற்கும் மேலாக 12.78 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு திட்டம் ஒன்றை பழனிசாமி அறிவித்தர். எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்கப் போகிறது என்று புது முலாம் பூசினார். அப்படியென்றால் அதுவரை குறைதீர்ப்பு அமைப்புகள் எதையும் செய்யவில்லை தானே!

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் மேலாக 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுத் தோசை ஒன்றைச் சுட்டார் பழனிசாமி. அந்தத் தோசைக்கான மாவு ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எடுக்கப்பட்டது.

2016 சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக ’அம்மா கால் சென்டர்’ திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ’1100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மக்களின் குறைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற சொன்னார் ஜெயலலிதா.

கோடிக்கணக்கில் பணம் செலவழித்து என்ன பயன்? 2018-ம் ஆண்டு 3,43,418 அழைப்புகளும் 2019-ம் ஆண்டு 2,51,886 அழைப்புகளும் வந்தன. அதாவது முந்தைய ஆண்டைவிட 2019-ம் ஆண்டு அழைப்புகளின் எண்ணிக்கை குறைந்ததே திட்டத்துக்கு வரவேற்பில்லை என்பதைக் காட்டியது, காரணம் அம்மா கால் சென்டரில் பிரச்சினைகளைக் கேட்டுக் கொள்கிறார்களே தவிரத் தீர்க்கப்படுவதில்லை என்பதுதான்.

தடபுடலாக ஆரம்பிக்கப்பட்ட அம்மா கால் சென்டர் திட்டமே 5 ஆண்டுகளாகத் தூங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், ஜெயலலிதா சுட்ட தோசையை 5 ஆண்டுகள் கழித்து 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்டி போட்டார் பழனிசாமி. ஜெயலலிதா தொடங்கிய ‘அம்மா கால் சென்டர்’ திட்டத்தை முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் என புதுசாக மேக் அப் போட்டுக் கொண்டு வந்தார் பழனிசாமி. இதில் கொடுமை என்ன தெரியுமா? ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா கால் சென்டர் எண்ணும் பழனிசாமி கொண்டு வந்த முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் எண்ணும் 1100 என்ற ஒரே நம்பர்தான்.

இப்படி ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்திலேயே தன் பெயரைப் பதித்த பழனிசாமி விளம்பரம் பற்றி எல்லாம் பேசலாமா? பொதுமக்கள் அளித்த வெள்ள நிவாரணப் பொருட்களில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிய அடிமைகள் விளம்பரம் பற்றி எல்லாம் பாடம் நடத்த அருகதை இல்லை.

தன்னுடைய அடிமை அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் நலன் மீது துளியும் அக்கறையின்றித் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ளப் பாஜக எஜமானர்களுக்கு ஏவல் பணி செய்தே காலம் தள்ளிய பழனிசாமிக்கு மக்களின் குறைகளை உடனுக்குடன் செவிமடுத்துத் தீர்த்து வைக்கும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.

அதிமுக ஆட்சியில் மக்களின் குறைகள் தீர்த்தோம் என்கிறார் பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், மக்களின் மாபெரும் பிரச்சனையே பழனிசாமியும் அவரது அமைச்சர்களும்தான். அவர்களிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றி மக்களின் குறைகளைப் போக்கியது திராவிட மாடல் ஆட்சிதான்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்ற நூறு நாட்களில் தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். அதேபோன்று 07.05.2021-இல் தாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் குறைகள் மீது விரைந்து தீர்வு காண "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் " என்ற தனித்துறையையே உருவாக்கி உத்தரவிட்டார். 100 நாட்கள் முடிவில் 2.29 இலட்சம் மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டு உரிய பயன்கள் பயனாளிகளுக்குச் சென்று சேர்ந்தன. இவை எல்லாம் தெரியாதது போல நடிக்கும் பழனிசாமியின் பம்மாத்து நாடகம் மக்கள் முன் எடுபடாது.

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப் படாமல் இருக்கும் தேவைகளை அந்தந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ-களின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றும் நோக்கத்துடன் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை 07.05.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள். இதன் மூலம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத திட்டங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்திச் செயல்படுத்தப்படு வருகின்றன. சாலை வசதிகள், மருத்துவ வசதிகள், பாலங்கள், சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் , பேருந்து நிலையங்கள் என இத்திட்டத்தின் மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.10946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 783 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 335 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 2024-2025 ஆம் ஆண்டிற்கு 3,496 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 468 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் மூலம் ரூ.14,442 கோடி மதிப்பீட்டில் 1251 திட்டப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

அதே போல மக்களுடன் முதல்வர் திட்டம் நகர்ப்பகுதி , ஊரகப்பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக, 38 மாவட்டங்களின் நகர்ப்புறப் பகுதிகளில், நவம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் 9.05 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு, முறையாகத் தீர்வு காணப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக 37 மாவட்டங்களின் கிராமப்புறப் பகுதிகளில், சூலை 2024 முதல் செப்டம்பர் 2024 வரை, 2,344 மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் 14.64 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 12.81 இலட்சம் மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. இத்திட்டம், ஏழை எளிய,விளிம்பு நிலையிலிருக்கும், அரசு சேவைகள் சரியாகச் சென்றடையாத பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் கட்ட முகாம்கள், 2025 சனவரி மாதம் முதல், 24 மாவட்டங்களில் 184 வட்டங்களில் (நிலை-1), ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் 1,270 கிராமப் பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மக்களது குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் நோக்கம், மிகவும் ஏழை, எளிய, எளிதில் அரசின் சேவைகள் சென்றடையாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அரசு வழங்கும், 15 துறைகளின் 44 சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்ப்பதாகும். இத்திட்டத்தில், 2025 மார்ச் மாதம் வரை 225 முகாம்கள் நடத்தப்பட்டு, 1.09 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 80,000 மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளன.

இதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் உதவி மையம் சென்னை, கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களின் குறைகளும் சந்தேகங்களும் தீர்க்கப்பட்டுள்ளன.

இப்படித் தனது ஆட்சியில் சொல்வதற்கு எதுவும் இல்லையே, எனும் விரக்தியில் பழனிசாமி உளறித் திரிவதைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது.

வெற்றுப் பொய்களைப் பேசி அரசியல் செய்யலாம் எனப் பிதற்றித் திரிகிறார் பழனிசாமி, ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்பார்கள், ஆனால் பழனிசாமிக்கு எத்தனை உண்மைகளைச் சொன்னாலும் பச்சைப் பொய் பேசும் பழக்கம் மட்டும் மாறப் போவதில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories