சென்னை, திருவல்லிக்கேணி, கபாலி நகர் பகுதியில் வசித்து வரும் நரேன்குமார் (34) என்பவர் Hitachi ATM Service நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று (25.05.2025) மேற்கண்ட நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து நரேன்குமாரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள SBI ATM சென்டரில் ஏதோ தவறு நடந்துள்ளது என்றும், அதனை ஆய்வு செய்யுமாறும் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த புகாரின்பேரில், நரேன்குமார் மேற்படி SBI ATM சென்டரில் ஆய்வு செய்த போது, யாரோ பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியே வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து நரேன்குமார் J-6 திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், உதவி ஆணையாளர் நீலாங்கரை மற்றும் திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து, சம்பவ இடத்தில் கிடைத்த தகவல் தொழில் நுட்ப பதிவுகள் மற்றும் ATM கண்காணிப்பு குழுவினருடன் ஒருங்கிணைந்து மேற்கண்ட குற்ற நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
திருவான்மியூர் மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளின் பதிவுகளை பெற்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த குல்தீப் சிங் (26), பிரிஜ்பான் (30), சுமித் யாதவ் (33) ஆகிய மூன்று பேரை இன்று (26.05.2025) திருவான்மியூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் 3 பேரும் ATM இயந்திரத்தின் முதல் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து, பணம் வரக்கூடிய இடத்தில் ஒரு கருப்பு நிற அட்டையை வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு சென்று, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கப்படாமல் இருப்பதை உள் நுழைந்து எடுத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வாடிக்கையாக கொள்ளையடித்து வருவதும் ஊபர், ஓலா போன்ற செயலிகள் மூலமாக கார்களை புக் செய்து இரயில் நிலையங்களுக்கு சென்று ஒவ்வொரு முறையும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து கள்ளச்சாவி, கருப்பு நிற ஸ்டிக்கர், இருபக்க டேப்ஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.