ஆவின் முகவர்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 320 மற்றும் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்ரீசர் பாக்ஸ்களை 60 பயனாளர்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ”ஆவின் நிறுவனம் 2 நோக்கங்களை கொண்டு பணியாற்றி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை வழங்கி கொள்முதல் செய்து வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க உறுதி செய்து வருகிறது.
ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் 600 தொழில் முனைவோருக்கு ஃப்ரீசர் பாக்ஸ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இன்று முதல் கட்டமாக 60 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஆவின் பால் பொருட்களின் விற்பனையை பெருக்கும். மீதமுள்ள பயனாளிகளுக்கு அடுத்தடுத்து வழங்கப்படும்.
ஆவின் பொருட்கள் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது இந்த ஆண்டு கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யப்படவில்லை. ஆவின் மட்டுமல்ல எந்த பொருளும் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது. அப்படி விற்கும் பட்சத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பதை பாராட்ட வேண்டும். கடந்த 10 வருடமாக அ.தி.மு.க நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு குடும்ப கதைகளைதான் பேசிக் கொண்டிருந்தார்களா? நிதி ஆயோக் கூட்டத்தில் குடும்ப கதையை யாரும் பேச முடியாது. நிதியை பற்றி தான் பேச முடியும்” என தெரிவித்துள்ளார்.