சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், நேற்று (17.05.2025) சாலைகள் அமைப்பதில் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில்,
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தற்போது 74,021 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இச்சாலை கட்டுமானத்தில் தரக்கட்டுப்பாடு (Quality Control) மிக முக்கிய பங்களிக்கிறது. இது நீடித்த, பாதுகாப்பான மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தரமான சாலைகளை உறுதி செய்வதற்கும், வாகன இயக்கச் செலவுகளைக் குறைப்பதற்கும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சாலை அமைக்கப்படவேண்டும் என்று அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் மற்றும் உருவாக்கப்படும் அனைத்து சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் தர உறுதி செய்வதற்கு தனியாக ஒரு தர நிர்ணய அமைப்பு தேவை என்ற கருத்தின் அடிப்படையில் தமிழக அரசால் 24.05.2010 அன்று அப்போதைய கழக அரசினால் துறை நிர்வாக சீரமைப்பு மற்றும் வலுபடுத்ததலின்கீழ் தரக்கட்டுப்பாடு பிரிவுகளை முழுமையாக செயல்படுத்துவதற்கு ஒரு தர நிர்ணய மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது.
தர நிர்ணய மேலாண்மை அமைப்பின் மூலம் முறைபடுத்துதல், செயல்படுத்துதல், கட்டுப்படுத்துதல், வழிநடத்துதல், ஒருங்கிணைத்தல் கூறுகளின்அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்றும், மேலும் இதனை கருத்தில் கொண்டு, புதிய முறையில் மூன்று அடுக்கு தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் தர உறுதியினை செயல்படுத்த தமிழக அரசால் 24.12.2010 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது என்றும், தரக்கட்டுப்பாடுக்காக தனியாக அலகு உள்ளது. இவர்களுக்கு சாலைப் பராமரிப்பு பணியோ அல்லது மதிப்பீடுகள் தயாரிக்கும் பணியோ இல்லை. முழுக்க முழுக்க தரத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
எனவே தார்க் கலவை மற்றும் சிமெண்ட் கலவை உருவாக்குவதில் தரக்கட்டுப்பாடு பொறியாளர்களுக்கு தான் 100 சதவீதம் பங்கு உள்ளது. தார்க்கலவை பணிக்கு உதவிப் பொறியாளர்கள் கண்டிப்பாக பிளான்டுக்கு (Plant) செல்ல வேண்டும். பொறியாளர்கள் இல்லாமல் எந்த வித பணிகளும் மேற்கொள்ள கூடாது.
தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் மற்றும் தளப் பொறியாளர்கள் தாரின் படிநிலை தரத்தினை பரிசோதனை செய்ய வேண்டும். தார்க் கலவை உருவாக்கும் போது ஜல்லி, தார் மற்றும் இதர மூலப் பொருட்கள் சரியான அளவில் கலக்கப்படுகிறா? என்பதை தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சாலை சேதமடையாமல் நிலைத்து இருக்கும் என்று தெரிவித்தார்கள்.
சாலை அகலப்படுத்தும் போதும், மண்வேலை, ஜி.எஸ்.பி (G.S.B), டபிள்யு. எம்.எம் (W.M.M) போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளுக்கு உரிய தரக்கட்டுப்பாடு பரிசோதனை செய்யப்பட வேண்டும். வெட்மிக்ஸ் (Wet mix) என்றாலே ஈரக்கலவை என்றுதான் அர்த்தம். ஜல்லியின் அளவு மற்றும் ஈரப்பதம் சரியானபடி இருந்தால்தான் சாலையில் இறுகுத் தன்மை (Compaction) உறுதிப்படுத்த முடியும். இதனை தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
கான்கிரீட் கலவையில் சிமெண்ட் கல் மற்றும் தண்ணீர் சரியான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் கான்கிரீட்க்கு ஏழு நாட்கள் மற்றும் 28 நாட்களுக்கு உறுதி சோதனை (Cube Test) மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை உரிய பதிவேட்டில் பதியப்பட்டு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள், ஆய்வுக்கு வரும்போது பொறியாளர்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்கள்.
பாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர்களில் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம் மற்றும் எடை உரிய முறையில் சோதனை செய்து பதிவேட்டில் பதியப்பட வேண்டும் என்றும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறத்தினார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் திஇரா.செல்வராஜ் இ.ஆ.ப., நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மு.சரவணன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.