இந்தியா என்கிற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டில், மாநிலங்களுக்கான சுயாட்சி உரிமைகளை பெற தமிழ்நாடு தனித்து நின்று போராடி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.
அப்படியான நடவடிக்கைகளில், முதன்மை நடவடிக்கையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசால் இயற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க தவிர்த்து வந்ததை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பையும் பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
இதனால், மாநிலங்களுக்கான உரிமை அதிகரித்துள்ளது. ஆனால், அதனை ஏற்றுகொள்ள விரும்பாத ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமைகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பல நிலைகளில் விமர்சித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா? என 14 கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடம் எழுதியுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவதற்கு எதிராக கேள்விகளை எழுப்பி இருக்கும் குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி " ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதத்திலும் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு எவ்வித சீராய்வு மனுவும் தாக்கல் செய்யவில்லை. ஆனால் குடியரசுத் தலைவர் மூலம் பின்வாசல் வழியாக தீர்ப்பை நிறுத்தி வைக்க சதி செய்கிறார்கள்.
குடியரசு தலைவர் மூலம் ஒன்றிய அரசு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நீதிமன்ற அளித்த விரிவான தீர்ப்பில் அதற்கான பதில் உள்ளது.
காவிரி விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் இது போன்று குடியரசு தலைவர் மூலம் தீர்ப்பை நிறுத்தி வைக்க, நீதிமன்றத்தை அணுகிய போது உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துள்ளது.
தற்போதும் அதே நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எந்த பிரச்னையும் வராது. அரசியல் அமைப்பு சட்டம் எந்தக்கால கட்டத்திலும், எல்லா நேரத்திலும் அனைவருக்கும் உறுதுணையாக நிற்கும். மாநில அரசு கொண்டுவரும் சட்ட மசோதாக்களை ஆளுநர் மூட்டைக் கட்டி வைத்தாலும், அரசியலமைப்பு அதிகாரங்கள் மூலம் அந்த மசோதாவை நாங்கள் சட்டமாக்குவோம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பிம் மூலம் தெளிவாக சொல்லி இருக்கிறது. அதனால்தான் அத்தகைய அரசியல் அமைப்பு சட்டத்தை முட்டு சந்தில் நிறுத்த பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு.
ஆளுநர்கள் மூலம் பாஜக ஆளாத மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களை செயல் இழக்க ஒன்றிய பாஜக அரசு எண்ணுகிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் எதிராக ஆளுநர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.