அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு அதிமுகவினர் பலரும் பல விஷயங்களை செய்து வரும் முனைப்பில் இருக்கின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மத்திய மாவட்டத்தில் அதிமுக சார்பில் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமை திருவண்ணாமலை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தொடங்கி வைத்தார்.
அப்போது இரத்த தானம் கொடுப்பதற்காக சென்ற அவர், இரத்தம் கொடுக்காமல் இரத்தம் கொடுப்பதுபோல் கையை மட்டும் காண்பித்தபடி இருந்த ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படத்தை அதிமுக ஐடி விங்கும் பகிர்ந்து "இரத்த தான முகாமில் மாவட்டக் கழகச் செயலாளர், L.ஜெயசுதா அவர்கள் இரத்த தானம் செய்தார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதாவின் இந்த நடிப்பு குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு தற்போது பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.