முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.5.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆற்றிய உரை:-
தீரர்கள் கோட்டமாம் இந்த திருச்சியில், இந்த சிறப்பான, மாபெரும் விழாவில், விழா இல்லை – இது ஒரு மாநாடு – அப்படிப்பட்ட மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் என்னுடைய ஆருயிர் சகோதரர் நேரு அவர்களுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை, பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நேருவைப் பாராட்டுவது, என்னை நானே பாராட்டிக் கொள்வது என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்! அந்தளவுக்கு என்னுள் கலந்தவர் நேரு அவர்கள்! இந்த தீரர்கள் கோட்டத்தின் தலைமைத் தீரர் நம்முடைய நேரு! பல்வேறு அடக்குமுறைகள சந்தித்து, அதையெல்லாம் வென்று, இந்த மத்திய மண்டலத்தை வலுவாக வளர்த்தெடுத்திருக்கிறார்!
இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த இழப்புக்கள் ஏராளம்! அதெல்லாம் ஈடுசெய்ய முடியாத இழப்புக்கள்! அது அத்தனையையும் இந்த இயக்கத்திற்காக, எங்களுக்காக, நமக்காக தாங்கிக்கொண்டவர் நேரு அவர்கள்! பெருமையோடு சொல்கிறேன்… இப்போதும் அதே உறுதியோடும் - மனவலிமையோடும் செயல்பட்டு வருகிறார்!
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அவருக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறையை வழங்கினோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மாநகரங்கள், நகரங்கள், பேரூர் என்று அனைத்தையும் மிகச் சிறந்த வகையில் வளர்த்து வருகிறார். அதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு நான் பஞ்சப்பூரில் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடிய ‘முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரில் அமைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்’! அதை பார்த்தவுடன் எனக்குள்ளே என்ன தோன்றியது என்றால், இது பஞ்சப்பூர் இல்லை; அனைத்து ஊரையும் மிஞ்சப் போகும் மிஞ்சப்பூர் என்று தோன்றியது!
ஒரே நேரத்தில், 401 பேருந்துகளை நிறுத்துகின்ற வகையில் பிரம்மாண்டமான பேருந்து முனையமாக அது அமைக்கப்பட்டிருக்கிறது! பசுமை சூழ்ந்ததாக இருக்கிறது. பார்க்கிங் வசதி, ஏ.சி. ரூம்ஸ், லிஃப்ட், எஸ்கலேட்டர், கடைகள் என்று ஒரு விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் இந்த பேருந்து முனையத்தை உங்களுக்காக நாங்கள் அமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக விளங்குகின்ற இந்த திருச்சிக்கு இப்படி ஒரு பேருந்து முனையம் நிச்சயம், அவசியம் தேவைதான்.
நேரு அவர்கள், அவருடைய திருச்சி மாவட்டத்திற்கு மிகவும் சிறப்பாக பார்த்துப் பார்த்து இதை உருவாக்கியிருக்கிறார்.
அடுத்து, திருச்சியில் இருந்து மற்றொரு அமைச்சரும் இருக்கிறார். நம்முடைய தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அவர் மட்டும் சாதாரணமானவரா என்ன? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரானவுடன், அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் என்று சொன்னார். நேற்று ப்ளஸ்-2 முடிவுகள் வந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக விழுக்காடு மாணவர்கள் தேர்வு பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான். கல்வித்தரமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது. இடைநிற்றலே இருக்க கூடாது என்று பள்ளிக்கூடம் போகாமல் இருக்கின்ற மாணவர்களையும் வீடு வீடாக தேடிச் சென்று, அறிவுரை சொல்லி, வேண்டிய உதவிகள் செய்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறோம்.
அதேபோல், கடந்த 2022-ஆம் ஆண்டு நான் டெல்லி சென்றபோது, அங்கிருந்த மாதிரி பள்ளிக்கூடத்திற்கு திரு.கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது சென்றேன். அப்போது அந்த பள்ளிக்கூடத்தை பார்க்கின்ற போது எனக்கு என்ன தோன்றியது என்றால், இதுபோல், இதைவிட சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்று அப்போதே நான் முடிவு செய்தேன். என்னுடைய அந்த கனவை மிகவும் சிறப்பாக நம்முடைய அன்பில் மகேஸ் அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
குறுகிய காலத்திலேயே அங்கே படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் படிக்கச் சென்றிருக்கிறார்கள். அப்படி செல்கின்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, நாம் எல்லாவிதமான ஆதரவும் செய்கிறோம்.
நேற்று துவாக்குடியில் திறந்து வைத்தது போல் நிரந்தரக் கட்டடங்களையும் உருவாக்கிக் கொண்டு வருகிறோம். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், முதல் கட்டடத்தை அவருடைய மாவட்டத்தில் கட்டி முடித்துவிட்டார்.
அதுமட்டுமல்ல, மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்ததுபோல், “என்னுடைய திருச்சிக்கும் ஒரு அறிவுச் சுரங்கம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்து, தற்போது பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாக அந்த நூலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
நேரு அவர்களும், அன்பில் மகேஸ் அவர்களும், இப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் நன்றாக ஸ்கோர் செய்து, எனக்கும் நல்ல பெயரை வாங்கித் தருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
நான் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் கூட சொன்னேன். “இந்த அரசின் வெற்றி என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் வெற்றி இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்று சொன்னேன். அந்த வகையில், இந்த 2 அமைச்சர்களுக்கும் துணையாக இருக்கக்கூடிய துறைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், அத்தனை பேரையும் நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அவர்களுக்கு உங்கள் சார்பில், என்னுடைய வணக்கத்தையும் செலுத்த விரும்புகிறேன்.
அடுத்து, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கின்ற அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இ.ஆ.ப., திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் இ.ஆ.ப., அவர்களுக்கும், திருச்சி மாவட்டத்தின் அலுவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால், நம்மை எல்லாம் ஆளாக்கிய, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோருடைய சிலைகளை திறந்து வைத்துவிட்டு தான் இந்த மேடைக்கு வந்திருக்கிறோம்.
இந்த திருச்சிக்கும், இந்த திராவிட தலைமகன்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் வளத்திற்கும் - நலத்திற்கும் - நன்மைக்கும் - உயர்வுக்கும் - அவர்கள்தான் அடித்தளம்!
தந்தை பெரியார் பிறந்தது, ஈரோடு என்றாலும், அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது இந்த திருச்சி! பெரியாரும், அண்ணாவும் வெவ்வேறு வழக்குகளில் ஒரே சிறையில் இருந்ததும் இந்த திருச்சியில்தான்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை, பெரியாரும், கலைஞரும் நடத்தியது இதே திருச்சியில்தான்!
கல்லக்குடி போராட்டத்தில் கைதான தலைவர் கலைஞர் அவர்கள், திருச்சி சிறையில்தான் அடைக்கப்பட்டார்! திராவிட இயக்கத்தின் போர்ப்பரணி பாடிய பல்வேறு புத்தகங்கள், இந்த திருச்சி மண்ணில் இருந்துதான் வெளியானது!
இது எல்லாவற்றின் அடையாளமாகதான் இந்த பெரியார் சிலையும் - அண்ணா சிலையும் - கலைஞர் சிலையும் - திருச்சியில் கம்பீரமாக அமைக்கப்பட்டிருக்கிறது! இதையெல்லாம் திறந்து வைக்கின்ற பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது!
இப்படி அந்த தலைவர்களுக்கு சிலை அமைப்பது நம்முடைய கடமை மட்டுமல்ல; நாம் காட்டுகின்ற சிறு நன்றிக்கடன்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, ஏராளமான முத்திரைத் திட்டங்களை நாம் கொண்டு வந்திருக்கிறோம். அனைத்தையும் பட்டியலிட்டுச் சொல்லவேண்டும் என்றால் நேரம் போதாது. காலம் கடந்துவிடும். அது சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்! எனவே சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன்.
இன்று திறக்கப்பட்ட 408 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்!’ 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 ஏக்கர் பரப்பளவில் ‘அண்ணா கனரக வாகன சரக்கு முனையம்!’
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 22 ஏக்கர் பரப்பளவில் ‘பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி’ அமைக்கப்பட இருக்கிறது!’
290 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெருந்தலைவர் காமராசர் பெயரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்!
18 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ‘பறவைகள் பூங்கா!’
150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘சர்வதேச ஒலிம்பிக் அகாடமி!’
3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம்!
4 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பச்சமலை சுற்றுலா திட்டம்!
மிகவும் முக்கியமான திட்டம் இந்த திருச்சி மாவட்டத்தில், தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில், 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் என்னால் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த தொழிற் பூங்காவில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஜபில், பெப்சிகோ தொழில் துவங்க உள்ளார்கள். இதன் மூலம் மட்டும் 10,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் தான் 400 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பூங்கா என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ‘மெகா’ திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே தரப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று திருச்சி வந்ததும், நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில், திருச்சி மாவட்டத்தில் எத்தனை பேர் பயனடைகிறார்கள் என்கின்ற பட்டியலை வாங்கிப் பார்த்தேன். எனக்கே வியப்பாக இருந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையாக வாங்குகின்ற சகோதரிகள் எத்தனை பேர் தெரியுமா? 4 இலட்சத்து 42 ஆயிரத்து 124 பேர். மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று, உயர்கல்வி உறுதிசெய்யப்பட்ட புதுமைப்பெண் மாணவிகள் 34 ஆயிரத்து 784 பேர்.
இதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 16 ஆயிரத்து 955 பேர் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தில் எத்தனை பேர் பயன் பெறுகிறார்கள்? 86 ஆயிரம் பிள்ளைகள் சூடான - சுவையான - சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்.
முதல்வரின் முகவரி திட்டத்தில், தீர்வு காணப்பட்டது 3 இலட்சம் மனுக்கள். அதாவது 3 இலட்சம் குடும்பங்கள்.
நான் முதல்வன் திட்டத்தில், 68 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!
இதுமட்டுமல்ல, 72 ஆயிரத்து 767 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வாழ்நாள் ஏக்கம் தீர்ந்திருக்கிறது.
5 ஆயிரத்து 843 விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள்!
70 ஆயிரத்து 360 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 ஆயிரத்து 160 கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!
99 ஆயிரத்து 181 கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவியை வழங்கியிருக்கிறோம்!
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 4000 வீடுகள் கட்டித் தந்திருக்கிறோம்!
54 ஆயிரத்து 428 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நலத்திட்டங்களை எல்லாம் செய்த தெம்போடுதான், இன்றைக்கு இந்த மாபெரும் விழாவில்
527 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 ஆயிரத்து 597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்!
1,032 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 122 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்திருக்கிறேன்!
அது மட்டுமல்ல, இதுவரைக்கும் நான் கலந்து கொண்ட விழாவில் அதிகமான பயனாளிகள் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு 856 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் தான் அதிகமான நிதியை வழங்கியிருக்கிறேன்.
இந்த ஆட்சி வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. 5-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு வந்திருக்கிறோம். 5-ஆம் ஆண்டு துவங்கி திருச்சி மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களை சந்தித்து பேசினேன். இந்த 4 ஆண்டுகளில் நாம் செய்திருக்கின்ற முக்கியமான சாதனைகளை, அதனால் தமிழ்நாடு அடைந்திருக்கக்கூடிய வளர்ச்சியை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அப்படி, சொல்லும்போது எனக்கே ஒரு நொடி வியப்பாக இருந்தது. அடேயப்பா! இவ்வளவு திட்டங்களை தொடங்கியிருக்கின்றோம் என்று எனக்கே மலைப்பாக தான் இருந்தது. ஊடக நண்பர்கள் இத்தனை துறைகளில் இவ்வளவு சாதனைகள் நடந்திருக்கிறதா! என்று அவர்களே ஆச்சரியப்பட்டார்கள்.
ஒன்று, இரண்டு என்றால் சொல்லலாம். ஒவ்வொரு நாளும் நாம் அவ்வளவு திட்டங்களை செயல்படுத்துகிறோம். சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சொல்ல முடியவில்லை. அடுத்த இலக்கை அமைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதால், எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.
ஒரு உதாரணத்திற்கு பெரிய நகரங்களில் செய்திருக்கின்ற முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களை மட்டும் சொல்கிறேன்.
மதுரையில், ஒற்றை செங்கலுடன் நிற்கின்ற எய்ம்ஸ் போல் இல்லாமல், சொன்ன தேதிக்கு முன்பே சென்னையில் கட்டி முடித்து, 6 இலட்சம் மக்களுக்கு மேல் பயனடைந்து வருகின்ற, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை!
கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா!
கோவைக்கு செம்மொழிப்பூங்கா!
மதுரைக்கு கலைஞர் நூலகம்! ஜல்லிக்கட்டு அரங்கம்!
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம்!
குமரி முனையில் – வள்ளுவர் சிலைக்கு கண்ணாடி இழைப்பாலம்!
அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பூங்காக்கள்!
டைடல் பார்க்குகள்!
பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள்! என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு வருகிறோம்.
நம்முடைய திராவிட மாடல் அரசு அமைவதற்கான வெற்றிப் பயணத்தைத் தொடங்கியதே இந்தத் திருச்சியில் இருந்துதான்! மறந்திருக்க மாட்டீர்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் மாநாட்டில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான என்னுடைய கொள்கையை அறிவித்தேன். என்னவென்றால், தமிழ்நாட்டைத் துறைவாரியாக எப்படி உயர்த்துவோம் என்று சொல்லி, ஏழு வாக்குறுதிகளை அப்பொழுது நான் சொன்னேன்.
முதல் வாக்குறுதி - வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு!
இரண்டாவது வாக்குறுதி மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
மூன்றாவது வாக்குறுதி குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
நான்காவது வாக்குறுதி அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்!
ஐந்தாவது வாக்குறுதி எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
ஆறாவது வாக்குறுதி உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
ஏழாவது வாக்குறுதி அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
இந்த ஏழு வாக்குறுதிகளில் பெரும்பாலனவற்றை இந்த 4 ஆண்டுகளிலேயே நாம் எட்டியிருக்கிறோம்!
பொருளாதாரத்தைப் பொறுத்தவரைக்கும், 9.69 விழுக்காடு என்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத வளர்ச்சி!
இந்தியாவிலேயே நாம் தான் நம்பர் ஒன்! வேளாண்மையைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு ஆண்டும் பாசனப் பரப்பும் – விளைச்சலும் அதிகமாகி சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம்! சட்டமன்றத்தில், தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்தோம்.
அதேபோல், கல்வியை எடுத்துக் கொண்டால், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற நம்முடைய புரட்சித் திட்டங்கள் காரணமாக, உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும், இந்தியாவின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம்.
தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், ஐந்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்று ஒன்றிய அரசே ரிப்போர்ட் தருகிறார்கள். காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களால், பள்ளிக் கல்வியில், பெரும் வளர்ச்சியை பார்க்கிறோம். மாணவர்கள் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. சத்துக்குறைபாடு குறைந்திருக்கிறது. அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது.
மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், நம்முடைய தொலைநோக்குத் திட்டமான, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, ஐ.நா. விருதையும் பெற்றிருக்கிறோம்.
நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் வளர்த்திருக்கிறோம். இது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகநீதி அரசை உருவாக்கி இருக்கிறோம்!
எந்த பிரிவினரும் விட்டுப்போகக் கூடாது என்று கவனமாக செயல்பட்டு – பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என்று எல்லாருக்குமான ஆட்சியாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி, நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது! நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு என்று சொன்னோம்.
அடுத்து வருகின்ற ஆண்டுகளில், இப்போது நான் சொன்ன சாதனைகளை எல்லாம், நாமே வென்றுவிடுவது போல் இதைவிட பெரிய சாதனைகளை படைப்போம் என்று உறுதியாக சொல்கிறேன்! இதைத்தான் நம்முடைய அரசியல் எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! அவர்களுடைய கடந்த ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்று சிறியதாக ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கலாமா?
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக - நாடு முழுவதும் உழவர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் அந்த போராட்டத்தை இழிவுபடுத்தி பேசினார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பேசினார்.
காவிரி நீர் உரிமையை பெறவும் உச்சநீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. அதனால், உழவர்கள் தற்கொலை செய்து கொண்டு அந்த துயரங்கள் எல்லாம் நடந்தது.
இலங்கைத் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம், அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்த ஒரே காரணத்தால்தான் அது நிறைவேறியது. நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் பற்றி எரிந்தது.
ஏன், ஜி.எஸ்.டி-க்கு தலையாட்டி, நம்முடைய அரசுகளின் உயிர் மூச்சான வரிவிதிப்பு உரிமையும் போனது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு
சாத்தான்குளம் என்று பொது மக்களையே கொன்று குவித்தார்கள்.
ஏன் இதையெல்லாம் இப்போது நினைவுபடுத்துகின்றேன் என்றால், அப்படிப்பட்ட இருண்ட ஆட்சியிலிருந்து, நான்கே ஆண்டுகளில், நம்முடைய விடியல் ஆட்சி எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம் என்று நீங்கள் ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் சொன்னேன்.
இது வெறும் தொடக்கம்தான்! நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்சன் 2.0 இனிதான் லோடிங்!
4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை படைத்தோம்! இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும்! ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள். அது நடந்தேற, தொடரட்டும் நமது திராவிட மாடல் ஆட்சி பல்லாண்டு! என்றும் நாங்கள் உங்களோடு! என்றைக்கும் உங்களோடு இருப்போம்! என்றும் நீங்கள் எங்களோடு இருக்கவேண்டும் என்று கேட்டு, விடைபெறுகிறேன்.