தமிழ்நாடு

கள்ளழகர் விழாவுக்காக வைகை அணை திறப்பு... ஆற்றில் இறங்கவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

கள்ளழகர் விழாவுக்காக வைகை அணை திறப்பு... ஆற்றில் இறங்கவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மதுரை சித்திரை திருவிழாவின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவிற்காக வைகை அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக நடந்து வருகிறது.

வருகிற 12ம் தேதி காலை 5.45 முதல் 6.05 மணிக்குள் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 55 அடி தண்ணீர் இருப்பு உள்ளததால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

வினாடிக்கு 1000 கனஅடி வீதம் வைகை ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீரை வைகை அணையின் உதவி செயற்பொறியாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் திறந்து வைத்து பூ தூவினர். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் திறக்கப்படும் தண்ணீர் கடந்து செல்ல தாமதமாகும் என்பதால் இரவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் விழாவுக்காக வைகை அணை திறப்பு... ஆற்றில் இறங்கவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

கடந்த சில நாட்களாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலப்பரப்பு ஈரப்பதத்துடன் உள்ளது. இதன்காரணமாக வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகமாக மதுரை மாநகரை சென்றடையும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவையும் பூர்த்தியடையும். வைகை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories