தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இப்பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.47% கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த தேர்வு முடிவில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் 97.98% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 97.53% திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 90.79% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
மேலும் தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பொதுத் தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
இப்பொதுத் தேர்வு முடிவில் பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.36% கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஆண்கள் பள்ளிகளை விட 5.16% கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.