சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிக்கையாளர்கள் - ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆற்றிய உரை பின்வருமாறு,
I would like to highlight few other achievements and initiatives of our Government regarding the Sports Development.
எப்படி மற்ற அனைத்து துறைகளிலும், தமிழ்நாடு சிறந்த இடத்தை, முதல் இடத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறதோ அதே போல விளையாட்டுத்துறையிலும் இந்திய ஒன்றியத்திலேயே முதலிடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு மிக, மிக முக்கியமான ஒன்றிரண்டு காரணங்களை சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசன் என்ற திட்டத்தை 2023 ஆம் ஆண்டு ஆரம்பித்து துவக்கி வைத்தார்கள்.
A first of its kind in the Country என்று சொல்லலாம். முதலமைச்சர் தொடங்கி வைத்து, அவரே தனது சொந்த பணத்திலிருந்து 5 லட்சம் ரூபாயை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசனுக்கு நன்கொடையாக அளித்தார்.
அதைத்தொடர்ந்து ஏராளமான நிறுவனங்கள், அமைப்புகளிலிருந்து நிதியுதவிகள் பெறப்பட்டுள்ளது. பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் வெற்றி பெற்று வந்த பிறகு பரிசுத்தொகையாகதான் நிதியுதவி வழங்குவோம். முதன்முறையாக, விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக ஒரு நாட்டிற்கு செல்கின்றார்கள் என்றால், அவர்களுடைய பயண செலவு, தங்குகின்ற செலவு, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான செலவு முழுவதையும் நம்முடைய அரசே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக ஏற்றுக்கொண்டது.
இதுவரை கிட்டத்தட்ட 680 விளையாட்டு வீரர்களுக்கு 17 கோடி ரூபாய் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக ஸ்பான்சர் வழங்கப்பட்டுள்ளது. I am proud to share that athletes who have benefited from TNCF assistance had won above 100 medals at national and international level games.
அதே மாதிரி இன்னொரு முக்கியமான திட்டம் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டது. விளையாட்டு வீரர்கள் நன்றாக படிக்கின்றார்கள் என்றால் அவர்களது வீட்டில் பெற்றோர்கள் அதிகமாக மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், விளையாட்டிற்கு செல்லும்போது பெற்றோர்களுக்கு தயக்கம், பயம் இருக்கும். இவனுடைய எதிர்காலம் என்னவாகும், வேலை கிடைக்குமா என்று யோசிப்பார்கள்.
அதற்குதான் நமது முதலமைச்சர் 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்துங்கள் என்று சொன்னார்கள். விளையாட்டை ஒரு career ஆக எடுத்தாலும் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையை விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தினோம்.
இதற்கான அரசாணை 2019 ஆண்டு போடப்பட்டது என்றாலும், அவர்கள் வெறும் 3 நபர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். இதை சரியாக செயல்படுத்துங்கள் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, சென்ற ஆண்டு சட்டப்பேரவையிலே நான் பேசும்போது ஒரு வருடத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்போம் என்று சொல்லி, 104 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.
அதுமட்டுமல்ல, இந்த ஆண்டு 25 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட குறைந்தது 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று உறுதி மொழியை கொடுத்திருக்கின்றோம்.
அதேபோல சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உயரிய ஊக்கத்தொகை வழங்கி இருக்கின்றோம். சென்ற வருடம் மட்டும் 1,821 வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 கோடி ரூபாய் ஒரே வருடத்தில் வழங்கி இருக்கின்றோம். எந்த ஆட்சியிலும் இந்த அளவிற்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டதில்லை.
கடந்த நான்கு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 4,650 விளையாட்டு வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறுகின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா அத்லெட்டிக்ஸ் வீரர்களுக்கு, சாதாரண விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் எவ்வளவு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படுமோ, அதே தொகை வழங்கப்படுகின்றது.
இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதேபோன்று இன்னொரு முக்கியமான செய்தி, விளையாட்டிற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது. ஒரு நல்ல விளையாட்டு வீரன் உருவாக வேண்டுமென்றால், அவர் பயிற்சி எடுக்க, அவரது திறமையை வெளிக்காட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு வேண்டும். ஒரு மைதானம் வேண்டும், ஒரு ஓடுதளம் வேண்டும். நம்முடைய அரசு விளையாட்டுத்துறையின் கட்டமைப்பினை மேம்படுத்த மிக, மிக முக்கியத்துவம் கொடுத்துவருகின்றது.
இந்த நேரத்தில் ஒரு சிறிய புள்ளி விவரத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். சென்ற ஆட்சியில் 2011 முதல் 2021 வரை 10 வருட ஆட்சியில் 348 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். இந்த நான்கு வருடத்தில் மட்டும் நம்முடைய அரசு 545 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மூலமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் ஒரு சில விசயங்களை நான் குறிப்பிட விரும்புகின்றேன். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற முக்கியமான திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அவர்களது தொகுதியில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பத்து கோரிக்கைகளை அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் வைத்தார்கள்.
இந்த திட்டத்திற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14,744 கோடி ரூபாய் மதிப்பில் 1,253 பணிகள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் எந்த கட்சி சார்பும் இல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலமைச்சர் அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான திட்டம் நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்கள் உயர்கல்வி படிக்க வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. படிப்புடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கித்தரும் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
முன்பெல்லாம் வெளிமாநிலங்களுக்கு சென்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிகம் இருப்பார்கள். தற்போது அது மிகவும் குறைந்துவிட்டது. 2020-2021ல் யு.பி.எஸ்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் 27 பேர்தான். அதனால், சென்ற ஆண்டு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவை தொடங்கினோம்.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினோம். யு.பி.எஸ்.சி. முதல்நிலை (பிரிலிம்ஸ்) தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினோம். யு.பி.எஸ்.சி. மெயின்ஸ் எழுதப்போன ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்தோம்.
தற்போது இத்திட்டத்தின் கீழ் தங்கி பயில வசதி ஏற்படுத்தி கொடுத்தோம். இதனால், நான் முதல்வன் திட்டத்தின் போட்டி தேர்வு பிரிவு தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 47 மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். இந்த ஆண்டு 50 மாணவர்கள் வெற்றி பெற்றார்கள். வரும் வருடங்களில் 100, 200 ஆகவேண்டும் என்பதுதான் முதலமைச்சர் அவர்களின் எண்ணமாகும்.
நம்முடைய அரசு அமைந்த முதல் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் அதனை 30,000 கோடி ரூபாயாக உயர்த்தினோம். 2024 ஆம் ஆண்டில் 35,000 கோடி ரூபாய் மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கு 37,000 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு வழங்க முதலமைச்சர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். கட்டாயம் அந்த இலக்கை அடைவோம்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் என எல்லோருக்கும் எல்லாம் என்ற அனைவருக்குமான அரசாக திராவிட மாடல் அரசு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருகின்றது.
ஆகவே, ஊடகங்கள் இந்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.