தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.4.2025) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 7.29 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பேராவூரணி கயிறு குழுமம், இராமநாதபுரம் மாவட்டம், வசந்த நகரில் 6.72 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நகை உற்பத்தி குழுமம், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நகரில் 1.15 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மகளிர் எம்ராய்டரிங் குழுமம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கலைஞர் கைவினைத் திட்டம்
2023-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து 3 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டமான பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்புதிய கைவினைஞர் நலத்திட்டம் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரான கூறுகளைக் கொண்டதாக இருப்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக அதனினும் மேம்பட்ட கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படும் என்று 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் வகையில் அவர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் தமிழ்நாடு அரசு "கலைஞர் கைவினைத் திட்டம்" என்ற திட்டத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்திட கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்பவேலைப்பாடுகள், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல் உள்ளிட்ட 25 வகையான தொழில் இனங்களுக்கு புதிய தொழில் அலகுகளை தொடங்குவதற்கும்; ஏற்கனவே உள்ள அலகுகளை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு, 25 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.50,000/- வரையிலும், வங்கிகடன் 3 இலட்சம் ரூபாய் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் அனைத்தும் உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புமிக்க கலைஞர் கைவினைத் திட்டம் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு கடன் வழங்கிய தாய்கோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கியாளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
குறுங்குழுமத் திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட குழுமங்களின் விவரங்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ரெட்டவயல் கிராமத்தில் 5.84 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 7.29 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பேராவூரணி கயிறு குழுமத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், வசந்த நகர் பகுதியில் 6.08 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 6.72 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நகை உற்பத்தி குழுமத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், வசந்த நகர் பகுதியில் இயங்கும் 20 நகை உற்பத்தி அலகுகள் இணைந்து செயல்படும் வகையில், குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6.08 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 6.71 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த நகை உற்பத்தி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நகரில் 1 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 1.15 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மகளிர் எம்ராய்டரிங் குழுமத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நகரில் இயங்கும் 50 ஆடை உற்பத்தி செய்யும் குறு நிறுவனங்கள் சுமார் 200 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் 25 மகளிர் தொழில் முனைவோர் பயன் பெரும் வகையில், குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 1.15 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த எம்ராய்டரிங் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள்
2023-24ஆம் ஆண்டில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த குறுந்தொழில் நிறுவனத்திற்கான விருதினை திருச்சிராப்பள்ளி – டிஜிட் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்திற்கும், சிறந்த மகளிர் நடுத்தரத் தொழில் நிறுவனத்திற்கான விருதினை காஞ்சிபுரம் – கிரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், சிறந்த மகளிர் சிறு தொழில் நிறுவனத்திற்கான விருதினை திண்டுக்கல் – பி.ஆர்.எஸ். டெய்ரி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.