ஒன்றிய அரசு புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, நடப்பு நிதியாண்டில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குறிப்பிட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்த பதிவில், " முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.
ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதலமைச்சர் அவர்கள் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்தப்புள்ளிவிவரமே சாட்சி.
தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி நடைபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்."என்று கூறப்பட்டுள்ளது.