இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக திகழ்வது சுற்றுலாவும் , தேயிலை விவசாயம் ஆகும் . அதோடு சுமார் 32 ஆயிரம் இருளர், குறும்பர் , காட்டுநாயக்கர், தோடர்,கோத்தர், பனியர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியினர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்புகள் இல்லாததால் அவசர சிகிச்சைகள் பெற நீலகிரி வாழ் மக்கள் சமவெளி பகுதியான கோவை மாவட்டம், கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என கூறியிருந்தார்.
அதன்படி உதகை அருகே Hpf பகுதியில் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் 700 படுக்கை வசதியுடன், 415 மருத்துவ ஊழியர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசங்களில் அதிநவீன உயிர் சிகிச்சை பெறும் வகையில், அதிநவீன மருத்துவ கருவிகளுடன் இம் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துமனையை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.
இந்த மருத்துவமனையில், பத்து வகையான அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டு அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். நீலகிரியில் அடர்ந்த வனப் பகுதிகளில் வாழக்கூடிய பழங்குடி மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக பழங்குடியினர் சிகிச்சை பெரும் வகையில் 50 படுக்கை வசதியுடன் தனிக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதுபழங்குடியினர் மக்களிடையே பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.