தமிழ்நாடு

1253 பணிகள் : ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்’ குறித்து பேரவையில் விளக்கிய துணை முதலமைச்சர்!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,253 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

1253 பணிகள் : ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்’ குறித்து பேரவையில் விளக்கிய துணை முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்’ தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்’ குறித்துப் பேசினார்கள். அதுகுறித்து, நான் என்னுடைய பதிலுரையில் ஏற்கெனவே நீண்ட விளக்கத்தை அளித்திருந்தேன். மீண்டும், நம்முடைய முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், அது குறித்த சில விளக்கங்களை நான் இங்கே அளிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத, அவசியத் தேவைகளை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின்பேரில் நிறைவேற்றுவதற்காக, ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். இதுகுறித்து, 10 கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பிவைக்குமாறு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக 2 ஆயிரத்து 437 பணிகளுக்கான முன்மொழிவுகள் அரசுக்கு வரப்பெற்றன. அதனையடுத்து, அவை துறைவாரியாக உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டன. இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் அவர்களது தலைமையிலான குழுவால் செயல்படுத்தக்கூடிய பணிகள் தெரிவு செய்யப்பட்டன.

அதனடிப்படையில், 2023-2024 ஆம் நிதியாண்டில் 784 பணிகள் கிட்டத்தட்ட 11,000/- கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் இதுவரை 367 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

2024-2025 ஆம் நிதியாண்டில், 469 பணிகள், 3 ஆயிரத்து 503 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் இதுவரை 65 பணிகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகமொத்தம் இந்தத் திட்டத்தின்கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,253 பணிகள், 14 ஆயிரத்து 466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளில் நடைமுறையில் உள்ள திட்டங்களின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் இந்த அவையில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

குறிப்பாக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை இப்பேரவையில் அறிவித்தபோது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அப்போது முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். ஆனால், இன்றைக்கு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப்போன்று, சில உறுப்பினர்கள் பரிந்துரைத்த பணிகளைச் செயல்படுத்த இயலாத நிலையில், அவற்றிற்கு பதிலாக மாற்றுப் பணிகள் கோரப்பட்டன. அவற்றிலும் சில பணிகள் செயல்படுத்த இயலாதவை எனத் தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுடைய எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரையில், அவர் சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில், 4 பணிகள் செயல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன; அதில் 3 பணிகள் நிறைவேற்றப்பட்டு, ஒரு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அவர் கொடுத்துள்ள கோரிக்கைகளில், மீதமுள்ள 6 பணிகளைப் பொறுத்தவரையில், ஒரு பணி துறையின் பரிசீலனையில் தற்போது உள்ளது; இதர 5 பணிகள் சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்டு, அவற்றிற்கு பதிலாக மாற்றுப் பணிகளைக் குறிப்பிட்டு வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மூலமாகக் கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பணிகளை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சர் அவர்கள் இந்தத் திட்டத்தை அறிவிக்கும்போது குறிப்பிட்டவாறு, எந்தவிதமான கட்சிப் பாகுபாடின்றி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories