தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 1) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதம் நடைபெறுவதற்கு முன்னதான, வினா - விடை நேரத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு, 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரு.1,018 கோடி செலவில், கட்டடப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டின் 19 இடங்களில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும், 6 இடங்களில் தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகளும் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, அரக்கோணம் அரசு மருத்துவமனையில், ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டும் பணி விரைவில் முடிவடைய இருக்கிறது. அதே வளாகத்தில், ‘ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வுக் கூடம்’ கட்டும் பணியும் முடிவடைய இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2022ஆம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதனையடுத்து, ஒரே ஆண்டில் 500 நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன. மீதம் இருக்கிற மையங்கள் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளன” என தெரிவித்தார்.