தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, நாளை முதல் திருத்திய புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கார்களுக்கு 5 ரூபாய் வரையிலும், பிற வாகனங்களுக்கு 15 முதல் 30 ரூபாய் வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது.
சென்னை புறவழிச்சாலை, தாம்பரம் மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி மற்றும் தாம்பரம் புழல் நெடுஞ்சாலை, சூரப்பட்டு சுங்கச்சாவடியில், உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த கட்டண நடைமுறை, 2026, மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டோல்கேட் கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இதற்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் அளித்த பேட்டியில் பேசியதாவது,
டோல்கேட்டை பார்த்தாலே ஒன்றிய அரசின் மீது கோபம் பற்றி எரிகிறது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என கூறும் நேரத்தில் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து கொண்டே செல்கின்றது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். ஆனால் சுங்கச்சாவடி விவகாரத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
ஆண்டிற்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஆண்டுக்கு மட்டும் சுமார் 7 லட்ச ரூபாய் டோல்கேட் கட்டணம் செலுத்துகிறோம். டோல்கேட் கட்டணத்தை உயர்த்தினாலும் போதுமான வசதி என்பது இல்லை. விபத்துகளை குறைக்க சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என கூறிய நிலையில், விபத்துகள் சுங்கச்சாவடி அருகே தொடர்ந்து நடைபெறுகிறது.
உதாரணமாக சென்னை - மதுரை ஒரு முறை செல்ல 1800 ரூபாயாக இருந்த டோல்கேட் கட்டணம், தற்போது 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. கொரோனாவிற்கு பிறகு பயணிகள் வருகை குறைந்துள்ள நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு மீண்டும் மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டோல்கேட் கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் தொடர்ந்து போராடுகிறது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எந்தவித பதிலும் இல்லாதது கண்டிக்கத்தக்கது.