உணவு தொடங்கி காய்கறிகள் என அனைத்துமே ஆர்டர் செய்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்துவிடுகிறது. மக்களும் தங்களுக்கு எதற்கு அலைச்சல் என்று ஆர்டர் செய்வது, பொருட்களை வாங்குவது தற்போது அதிகரித்து விட்டது. இதனால் இ- காமர்ஸ் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
ஆனால், இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் டெலிவரி தொழிலாளர்கள் தான் மழை, வெய்யில், புயல் என எதுவும் பார்க்காமல் தங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இப்படி இவர்கள் பல இடங்களுக்கு செல்லும் போதும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறோர்கள்.
சில வாடிக்கையாளர்கள் இவர்களை கீழ்தரமாக நடத்தும் சம்பவங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதேபோல் இ- காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் பாதுகாப்பை பற்றி பெரிதாக கவனத்தில் எடுத்து கொள்வதில்லை.
ஒரு பொருளை, டெலிவரி செய்துவிட்டு அடுத்த இடத்திற்கு செல்வதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்தால் கூட அவர்களுக்கு என்று ஒரு இடம் இல்லை. இவர்களது ஓய்வு இடம் என்பது மரத்தடி மட்டும்தான். அவர்களை மரம் மட்டும்தான் நிழல் தந்து வரவேற்கிறது.
இந்நிலையில்தான் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி ஊழியராக இருக்கும் தொழிலாளர்களின் நிலையை உணர்ந்த சென்னை மாநகராட்சி இவர்களுக்கு என்று ஓய்வு அறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது சோதனை முறையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதியில் ஓய்வு அறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளன. மேலும், இந்த அறைகள் ஏ.சி வசதியுடன் பல்வேறு சிறப்புகளை கொண்டு அமைக்கப்பட உள்ளது.