மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாவார்பட்டியில் முத்துக்குமார் என்ற காவலர் என்பவர் நேற்று முன்தினம் கஞ்சா வழக்கில் தொடர்புடைய சிலரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக - கேரள எல்லைப் பகுதியான கம்பம் அருகே உள்ள கம்பம் மெட்டு மலைச் சாலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பொன் வண்ணன் பதுங்கியிருந்துள்ளார்.
அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, அவர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றுள்ளார். இதன் காரணமாக தற்காப்புக்காக போலிஸார் நடத்திய தாக்குதலில் பொன் வண்ணன் மீது குண்டு பாய்ந்ததில் அவர் காயமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.