தமிழ்நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ள தீர்மானம் குறித்தும், இந்தியாவில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் மனநலன் பிரச்சினைகளை கருத்தில் கொண்டும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்.வி.என் சோமு எம்.பி. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு அமைச்சகத்திடம் இரு வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில், தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ள சுகாதார தீர்மானத்தை முன்வைத்து ஒன்றிய அரசு இதுவரை திட்டங்கள் வகுத்திருந்தால் அதன் விவரங்களையும் அதற்கான நிதி உதவியையும் வெளியிட வேண்டும் என கேட்டுள்ள அவர், நாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே மனநலப் பராமரிப்பு நிபுணர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசு அதை பற்றி அறிந்திருக்கிறதா எனவும், நாட்டில் மனநலப் பிரச்சினைகளை முறையாக நிவர்த்தி செய்வதற்கும், மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய சமூக களங்கத்தைக் குறைப்பதற்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா அப்படியிருந்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் மனநலத்திற்கான தற்போதைய செலவுகள் குறித்த விவரங்கள் என்ன? என்றும் கேட்டுள்ளார்.
அதேபோல், கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு நாட்டு மக்களிடையே நுரையீரல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளால் ஏற்படும் இறப்பு திடீரென அதிகரித்துள்ளதை அரசாங்கம் தீவிரமாகக் கவனிக்கின்றதா? என மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,கோவிட் தொற்றுநோய்களின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து அரசாங்கம் நடத்தியிருக்கும் ஆய்வுகளை வெளியிட வேண்டும் எனவும் கிரிராஜன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.