நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ”மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கான தண்டனையே தொகுதி மறுசீரமைப்பு. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்கள் மட்டும் பாதிப்படைவதில்லை, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படும்.அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி ” என தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ”மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம். வெற்றியை நோக்கி பயணிப்போம்.
இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புதான் இந்த கூட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திரண்டுள்ள நாம், நிச்சயம் வெற்றி பெறுவோம். எனது அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இங்கு திரண்டுள்ள நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.” என தெரிவித்துள்ளார்.