2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் ஆபத்துள்ளது என்பதை தனது முதல் எதிர்ப்பு குரலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.
இதோடு நிற்காமல் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, தொகுதி மறுசீரமைப்பிற்கு ஒன்றிணைந்து குரல் எழுப்ப செய்துள்ளார். மேலும் இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்.
அதனடிப்படையில் “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டத்தில் பங்கேற்கும்படி 7 மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், அம்மாநில தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு கடிதம் எழுதி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு நேரில் சென்று “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தை கொடுத்து அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ், சஞ்சய் குமார் தாஸ் பர்மா (பிஜு ஜனதா தளம், முன்னாள் அமைச்சர் ஒடிசா), பல்விந்தர் சிங் பூந்தர் (சிரோமணி அகாலிதளம், பஞ்சாப்) மற்றும் கேரள அரசியல் கட்சி தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு சால்வை அணிவித்து, தமிழ்நாட்டின் சிறந்த பரிசு பொருட்கள் அடங்கிய பெட்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.