தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், அதிமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அந்த வகையில் மின்சாரத்துறை மற்றும் கடன் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியால் ரூ.16,500 கோடி வட்டி கட்டுவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேரவையில் பேசியது வருமாறு :
அதிமுக ஆட்சி காலத்தில் 24 மணி நேரம் மின்சாரம் என்னங்க பாடும் என தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அவசரமாக அரசாணை போடப்பட்டது .ஆனால் அதற்கும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டெல்டா மாவட்டங்களில் 16 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மின்மாற்றிகள் புதிதாக மாற்றப்பட்ட வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் 24 மணி நேரம் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தவறான தகவலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி விவசாயிகளுக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது
மின்சாரத் துறையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் 40 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் 68,406 கோடி ரூபாய் மின் கட்டண மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறை மேம்பாட்டுக்காக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது .தற்போது 68 ஆயிரம் கோடி ரூபாய் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத் துறைக்கான கடனுக்கான வட்டி மட்டும் 16,500 கோடி ரூபாய் மாதம் மின்சாரத்துறை தற்போது கட்டி வருகிறது. இதை சமாளிப்பதற்காக தற்போது தமிழ்நாடு அரசு மின்சாரத் துறையில் புதிய மின் திட்டங்களை நான்கு ஆண்டில் செயல்படுத்தி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நஷ்டத்தில் இருந்த மின்சார துறை வட்டியும் செலுத்தி இழப்பீடையும் சமாளித்து தற்போது மின்சாரத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.