தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைப்பது குறித்து உறுப்பினர் மாரிமுத்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு,"இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்காக குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும் .
திருத்துறைப்பூண்டி பேரூராட்சியின் கூடுதல் தேவையை ஆராய்ந்து உடனடியாக குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கோள்ளப்படும். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் புதிய திட்டத்தினை உருவாக்கி அதன் மூலமாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருத்துறைப்பூண்டி இரண்டாம் நிலை நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த எல்லா தகுதியும் இருந்தால் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.