இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
இக்கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று 2025- 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
1. நெல் சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய்வித்து ரகங்களின் தரமான சாற்று விதைகளும், பிற இடுபொருட்களும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருந்து உழவர்களுக்கு வழங்கப்படும்.
2. சர்க்கரை ஆலைகளுக்கு 2024- 25 அரவைப் பருவத்திற்கு கரும்பு வழங்கிய உழவர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும். இதற்கு ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3. கரும்பு விதைக்கரணைகள், நாற்றுகள், இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் நடவுமுறை, நுண்ணுட்ட உரக்கலவை, தோகை தூளாக்குதல் நிலப்போர்வை அமைத்தல் போன்றவை கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். ரூ.10 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கீடு.
4. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் ரூ.125 கோடி ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
5. ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் 9 ஆயிரத்து 800 ஏக்கரில் செயல்படுத்த ரூ.4 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செய்யப்படும்.
6. கோடைக்காலப் பயிர்த் திட்டம் மூலம் தக்காளி, வெண்டை, வெங்காயம், கத்தரி, மிளகாய், கீரைகள் போன்ற காய்கறிப் பயிர்கள் 57 ஆயிரத்து 300 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். இதற்கென 10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. 3 லட்சம் ஏக்கரில் ஆயிரத்து 168 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவப்படும்.
8. மணப்பாறைக் கத்தரி, சில்லுக்கொடி கத்தரி, குலசை கத்தரி, தருவைத் தக்காளி, மஞ்சள் குடம் தக்காளி, ஆனைக்கொம்பன் வெண்டை உள்ளிட்ட பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ரூ.2 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
9. வெங்காய சேமிப்புக்கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி ஒன்றிய , மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
10. தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்க ரூ.8 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
11. மிளகு, கொத்தமல்லி, மிளகாய், ஜாதிக்காய், கிராம்பு, பட்டை, பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடிகளை ஊக்குவிக்க ரூ.11 கோடியே 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.