கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அந்த வகையில் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி பாதிக்கப்பட்ட பகுதியில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினருமான ராமகிருஷ்ணன், அவரது தாய் விஜயராணி ஆகிய இருவரும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதமசிகாமணி ஆகியோரின் மீது சேற்றை வீசியெறிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி மற்றும் திமுகவினரை, பொதுமக்களிடம் இருந்து மீட்டு பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பாஜகவுக்கு கண்டனங்கள் எழுந்தது. ஏற்கனவே அமைச்சர் பி.டி.ஆர். காரின் மீது பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் செருப்பை வீசிய விவகாரத்திற்கு பாஜகவுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்த விவாகரத்துக்கு பாஜகவுக்கு கண்டனங்கள் குவிந்தது.
இந்த சூழலில் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில், ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்ட 2 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், ராமகிருஷ்ணனை கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதைதொடர்ந்து தற்போது தலைமறைவாக இருந்த அவரது தாயாரும், பாஜக விழுப்புரம் மாவட்ட மகளிரணி முன்னாள் துணை தலைவருமான விஜராணியை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.