பாடி சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் புதிய திருத்தேர் செய்தல் மற்றும் திருக்குள திருப்பணி சீரமைத்தல் பூமி பூஜை விழா மற்றும் பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் பாலாலயம் விழா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையர் திருமதி.முல்லை, உதவி ஆணையர் சிவகுமார், மண்டலக் குழுத்தலைவர் பி.கே.மூர்த்தி, அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வானவில் விஜய், திருக்கோயில் உபயதாரர் ஜெகநாதன், உள்ளாட்சிப் பிரதிநிதி எம்.டி.ஆர் நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், டாக்டர் பூர்ணிமா, திருமதி.நாகவல்லி பிரபாகரன், திருமதி.உமா சந்தானம், செயல் அலுவலர்கள் குமரன், சசிகுமார் மற்றும் இறையன்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “திருக்கோவிலுடைய திருப்பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய காலத்தில் இருந்து நடைபெறாத எண்ணிலடங்கா பக்தர்கள் நலன் சார்ந்த திருக்கோவில் திருப்பணிகள் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நிகராக எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை என்பதை பெருமிதத்தோடு மகிழ்ச்சியோடு தமிழ்நாடு முதல்வர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நடந்தது என்பதை கூறிக் கொள்வதில் துறையினுடைய அமைச்சர் என்ற வகையில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைக்கு அமர்ந்திருக்கின்ற இந்த கோயில் தலமானது அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு பழமையான சிவலிங்கத்தை கொண்ட நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில் கட்டிடம் சிதலமடைந்த நிலையில் இருப்பதாலும், கட்டிடத்தினுடைய சாலையின் மட்டத்திற்கு கீழாக 4 அடி பள்ளத்திலேயே இறைவன் இருப்பதாலும், சாலை மட்டத்திற்கு திருக்கோயிலை உயர்த்தி கற்றாளி திருக்கோயிலாக கட்டுவதற்கு சுமார் ரூ.3.50 கோடி செலவில் திருப்பணிகள் என்று துவக்கப்பட்டுள்ளன.
பாடி, அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி செலவில் திருக்குளத்தை புனரமைக்கின்ற பணியும், புதிதாக ரூ.85 லட்சம் செலவில் புதிய திருத்தேர் செய்கின்ற பணியையும் துவக்கி வைத்திருக்கின்றோம். இன்று மட்டும் தமிழகத்திலே 25 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதுவரையில் நடைபெற்ற குடமுழுக்குகள் எண்ணிக்கை 2,664 திருக்கோயில் குடமுழுக்கு முடிவுற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக குடமுழுக்கின் எண்ணிக்கை நிச்சயம் 3000 தாண்டும் என்ற வகையில் திட்டமிட்டு இந்து சமய அறநிலையத்துறை இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இன்றைக்கு கோவூரில் 40 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலின் திருத்தேர் புனரமைக்கின்ற பணி முடிவுற்று இன்றைக்கு தேரினுடைய வெள்ளோட்டம் நடைபெற இருக்கின்றது. அந்த வகையில் இதுவரையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 114 தேர்கள், ரூபாய் 74 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.
பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டுக்கணக்காக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை வீதி உலா வர வைத்த பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு அந்த வகையில் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் திருத்தேர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் இருந்தபோது தீக்கிரையாக்கப்பட்ட அந்த திருத்தேரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகுதான் 450 கிலோ வெள்ளியிலே அந்த திருத்தேரையும் புதுப்பிக்கின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றது.
திருத்தேர் மராமத்து பணிக்கு மட்டும் சுமார் ரூ.16 கோடி செலவில் 64 திருத்தேர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நிறைவுற்றிருக்கின்றன. திருத்தேர்களை பாதுகாப்பதற்காக மழை, வெயில் காலங்களில் தேர்கள் சிதிலமடையாமல் இருப்பதற்காக சுமார் ரூபாய் 26 கோடி செலவில் 183 திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஐந்து தங்கத் தேர்கள் ரூபாய் 31 கோடி செலவிலும் வெள்ளித்தேர் ஒன்பது ரூபாய் 29 கோடி செலவிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு அந்த வகையில் தான் நம்முடைய பாடி அருள்மிகு திருவல்லீஸ்வர் கோவிலில் திருத்தேர் ரூபாய் 85 லட்சம் செலவில் உருவாக்கப்படுகின்ற பணியை துவக்கி வைத்திருக்கின்றோம். புதிய திருக்குளங்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நான்கு குளங்கள் ரூ.4.20 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் மரமாத்து பணிகள் என்று எடுத்துக் கொண்டால் நீர்நிலைகளை பாதுகாப்பதும் தெப்பம் நடத்தாத திருக்கோயில்களில் தெப்ப திருவிழாவை நடத்துவதற்கும், நூறாண்டுகள், 200 ஆண்டுகள் என்று தெப்பம் இல்லாமல் இருந்த திருக்கோயிலில் கூட இந்த ஆட்சி வந்த பிறகு தான் தெப்பங்களும் சிரிக்கின்ற நல்ல சூழல் உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் 220 திருக்குளங்கள் சுமார் ரூபாய் 120.33 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரையில் எடுத்துக் கொண்டால் சுமார் 1,19,761 இடங்களில் நிலங்களுக்கான அளவை கற்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன. நில அளவை 1,82,490.76 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு கற்கள் நடப்பட்டு, அவை எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று பதாகைகளாக வைத்திருக்கின்றோம்.
நிலமீட்பு என்று எடுத்துக் கொண்டால் ரூ.7,196 கோடி, 7,437 ஏக்கர் நிலம் 940 திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பார்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் 15 நாட்களுக்கு ஒரு முறை மாநில வல்லுநர் குழு திருப்பணி அனுமதி (SLEC) எனப்படுகின்ற கூட்டங்கள் திருக்கோயில்கள் கட்டுமான பணிகளுக்கும் புனரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் SLEC வல்லுனர் குழு அமைக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக 11,386 திருக்கோவிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிர்வாக அனுமதி என்று எடுத்துக் கொண்டால் சுமார் 24,572 பணிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பணிகளுடைய ஒட்டுமொத்த மதிப்பு என்று எடுத்துக் கொண்டால் சுமார் ரூபாய் 5,710 கோடி அளவிற்கு இதுவரையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். உபயதாரர் நிதி இந்து சமய அறநிலையத்துறையில் இந்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாக இவ்வளவு பெரிய தொகை எந்த காலத்திலும் உபயதாரர்கள் முன் வரவில்லை அந்த வகையில் ரூ.1308 கோடி இதுவரையில் உபயதாரர்கள் நிதி பெறப்பட்டிருக்கின்றது.
இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக எங்கு பார்த்தாலும் தூப தீப ஆராதனைகள் திருக்கோயிலின் மணியோசைகள், தேவாரம் திருவாசகத்தின் சத்தங்கள் எங்கு பார்த்தாலும் அரோகரா என்றும், ஓம்சக்தி என்ற குரல்கள், ஓம் நமசிவாய என்றும் எத்திசையிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீக ஆட்சியாக தமிழக முதல்வர் ஆட்சி நடைபெறுவதை பக்தகோடிகள் அனைவரும் பன்னெடுங்காலம் தொடர வேண்டும் என்ற பிரார்த்தனையோடு எங்களுடைய திருப்பணி மேலும் தொடரும்" என்றார்.