சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில், 200 வார்டுகளைக் கொண்டுள்ளது. மாநகராட்சி எல்லைகளுக்குள், 22 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டசபை தொகுதிகளின் எல்லைகளும், தற்போது ஒருசேர அமையவில்லை. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில், தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளை கருத்தில் வைத்து, சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை, மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்தது.
இதற்கான அறிவிப்பை, அமைச்சர் கே.என். நேரு, கடந்த 2022 ஏப்., 7ல் வெளியிட்டார். இதன்படி, சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும், அடிப்படை வசதிகளை சீராக வழங்க வசதியாக, மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து, மண்டலங்களின் எண்ணிக்கையை, 15ல் இருந்து, 20 ஆக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அரசாணை வெளியிப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, இராயபுரம், திரு.வி.ந. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 15 மண்டலங்களில் மணலி மண்டலம் பிரிக்கப்பட்டு திருவெற்றயூர், மாதவரம் மண்டலங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே உள்ள 14 மண்டலங்களுடன், 6 மண்டலங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம் – திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி – சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.