தமிழ்நாட்டில் தாய்மொழிக் கற்றலை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ் படித்தோருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு.
தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி, கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டு, இடஒதுக்கீட்டிலும் தனி இடம் வழங்கப்படுகிறது.
அறிவியல் ஆய்வுகளின் படி, தாய்மொழிக் கல்வி கற்றல் என்பது இதர மொழிகளை கற்பதை விட இன்றியமையாதது என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழ்க் கற்றலை உறுதி செய்து வருகிறது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஒருவர், தமிழ்நாட்டில் தமிழ் மொழி கட்டாயப் பாடமல்ல என பேசியது, தமிழ்நாட்டளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “‘தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம்’ கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டது. அனைத்து வகையான பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.
அதன்படி, கடந்த 2015-2016 கல்வியாண்டில் இச்சட்டம் ஒன்றாம் வகுப்பில் அமல்படுத்தப்பட்டு ஒவ்வொரு வகுப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.