தமிழ்நாடு

தமிழிலேயே CSE தேர்வெழுதிய முதல் IAS.. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான ஆர்.பாலகிருஷ்ணன்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழிலேயே CSE தேர்வெழுதிய முதல் IAS.. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான ஆர்.பாலகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும்.

ஆர்.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) அவர்கள் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர்.

ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்திய ஆட்சிப் பணியில் 1984-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். ஒடிசா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். 2018-ல் பணிஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு முன்னாள் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தார்.

தமிழிலேயே CSE தேர்வெழுதிய முதல் IAS.. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான ஆர்.பாலகிருஷ்ணன்!

திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.பாலகிருஷ்ணனுக்கு IAS (ஓய்வு) பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார் ஆர்.பாலகிருஷ்ணன்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி IAS ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன்.

1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார். அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்” என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. “உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிந்துவெளி ஆய்வாளரும், வரலாற்று அறிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories