தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி அளிக்கும் வகையில் 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' அறிவிப்பைச் சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டு மே 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 2022 ஆண்டு செப்.15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதை அடுத்து 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' கூடுதலாக 433 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 1969 பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 108 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து 25.8.2023 அன்று அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் மூலம் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றதை அடுத்து தெலங்கானா அரசும் காலை உணவு திட்டத்தை அரசு பள்ளியில் அமல்படுத்தி நடைமுறைபடுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது இங்கிலாந்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான காலை உணவு திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
இங்கிலாந்தில் 750 பள்ளிகளில் முதல் கட்டமாக காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருகிறது. காலையில் பள்ளி குழந்தைகளுக்கு கோதுமை கஞ்சி, பழங்கள், தயிர் என ஆரோக்கியமான சத்தான காலை உணவுகள் வழங்கப்பட உள்ளது. இந்தி திட்டத்தால் 18 லட்சம் குழந்தைகள் பயனடையாவர்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னோடி திட்டமான காலை உணவு திட்டம் உலகம் முழுவதும் சென்றுள்ளதற்கு எடுத்துக்காட்டுதான் இங்கிலாந்தில் காலை உணவு திட்டம் அமைகிறது. திராவிட மாடல் அரசின் காலை உணவுத்திட்டத்தை ஏற்கனவே கனடா அரசும் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.