தமிழ்நாடு

”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது” : அமைச்சர் ரகுபதி பதிலடி!

பழனிசாமி அரசை விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே?

”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் யுக்தியை செய்கிறார் பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

அதில், ”பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை. ஆனால், பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திமுக அரசை கண்டிக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுத்த பிறகும் பழனிசாமி அரசை விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே?

பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று தனித்தனியாக விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தனர். அதன் பிறகு உதவி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கை மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வந்துள்ளது. அதனால்தான் மாணவிகள் துணிந்து புகார் அளிக்கிறார்கள்.

மும்மொழிக்கொள்கையை பாஜக புகுத்த முயற்சிக்கிறது; தமிழ்நாட்டிற்கு உரிய வரிப்பகிர்வு தருவதில்லை; ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை; கல்விக்கு நிதி இல்லை; இப்போது பேரிடர் நிவாரணமும் இல்லை என தொடர்ந்து மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றி தன்னுடைய பாஜகவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி. ஒன்றிய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் யுக்தியை செய்கிறார் பழனிசாமி. ஒருசில குற்றச் சம்பவம் நடப்பதை வைத்து ஒட்டுமொத்தமாக பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பில்லை என மாணவிகளையும் பெற்றோரையும் பழனிசாமி அச்சுறுத்துவது கேவலமான மனநிலையை காட்டுகிறது.

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கு மற்றும் காவல் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் தமிழக அரசின் செயல்பாட்டை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கடந்த 17ம் தேதி பாராட்டினர். அத்துடன், மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு தெரிந்து உண்மை கூட எதிர்க் கட்சித் தலைவருக்கு தெரியவில்லை.

பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. மிருகங்கள் மனிதர் போர்வையில் உலவுவதால் அவை கண்களுக்கு எளிதாக தெரியாது. அந்த மிருகம் குற்றம் செய்ததாக புகார் வந்ததும் உடனடியாக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கிறது. பாலியல் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தருகிறது திமுக அரசு என்பதை மறைத்து, அவதூறு அரசியல் செய்யும் அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியையே தருவார்கள்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories