சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், சிறையிலிருந்து முன்விடுதலை செய்யப்பட்ட 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்கிட ரூ.3.75 கோடிக்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு :
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கத்தின் சார்பாக, விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3 கோடியே 75 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்குகின்ற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்று உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன்.
இந்த விழாவில் பங்கேற்கின்ற வாய்ப்பை உருவாக்கித் தந்த சட்டத்துறை அமைச்சர் அண்ணன் ரகுபதி அவர்கள் மற்றும் சிறைத் துறையின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துறையின் மீது நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எப்போதுமே ஒரு தனி பிரியம், தனி அக்கறை உண்டு.
டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டு, அரியலூர் சிறையிலும் பிறகு திருச்சி சிறையிலும் அவர்கள் அடைக்கப்பட்டபோதும் சரி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை சிறையில், 62 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சரி, சிறைவாசிகள் சந்திக்கின்ற பிரச்சினைகளை அவரே நேரில் எதிர்கொண்டவர் தான், உணர்ந்து கொண்டவர் தான், தெரிந்து கொண்டவர் தான்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மட்டுமல்ல, நம்முடைய முதலமைச்சர் அவர்களும் கூட, சிறைவாசிகளின் கஷ்டத்தையெல்லாம் உணர்ந்தவர்கள் தான். 1976-ஆம் ஆண்டு மிசா அடக்குமுறை காலத்தில், ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு, எல்லாவகை துயரங்களையும் அனுபவித்தவர்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது சொன்னார்கள். அவர் சிறையில் இருந்த காலத்தில், அவர் இருந்த சிறை அறையிலேயே கழிவறையும் சேர்ந்து இருந்தது. அதன் நாற்றம் மூக்கைத் துளைத்தது. அந்த நாற்றத்தை தவிர்ப்பதற்காக, பூட்டப்பட்ட கம்பிக் கதவுகளுக்கு பின்னால் நின்று கொண்டு, மூக்கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு இரவு முழுவதும் நின்றுகொண்டே தூங்கி இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அப்போது சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட உணவு, தரம் இல்லாமல் இருந்தது என்பதையும் பேசியிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு தான், சிறைவாசிகளுக்கு சுகாதாரமான கழிப்பிட வசதிகளையும், நல்ல உணவுகளையும் வழங்க முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைக்கு திராவிட மாடல் அரசு, சிறைச்சாலைகளுக்குள் நூலகங்களை ஏற்படுத்துவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சிறைத்துறை வரலாற்றில் முதன் முறையாக ரூ.2 கோடி செலவில் சிறை நூலகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறைத்துறை நூலகங்களுக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அவருக்கு பரிசாக வந்த 1500 புத்தகங்களை சிறைத் துறைக்கு வழங்கியிருக்கின்றார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு நடத்துகின்ற அந்த புத்தகக் காட்சிகளில், சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் பொதுமக்கள் பலரும், பொது அமைப்புகளும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவதை நாம் தொடர்ந்து பார்க்கின்றோம்.
எனக்கு அன்பளிப்பாக வருகின்ற புத்தகங்களைக் கூட சென்னைப் புத்தகக் காட்சி போன்ற நிகழ்வுகளின் மூலம், சிறை நூலகங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம். கடந்த 2023-ஆம் ஆண்டு நானே புழல் சிறைக்கு நேரில் சென்று அந்தப் புத்தகங்களை பரிசாக அந்த சிறைவாசிகளுக்கு வழங்கினேன்.
அந்த காலத்தோடு ஒப்பிடும்போது, இப்போது, சிறையில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு இப்போது அசைவ உணவுகளும், சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களைவிட, தமிழ்நாடு அரசின் சிறைத்துறை ஒரு முன்மாதிரி துறையாக திகழ்கிறது.
சிறைவாசிகளின் சீர்திருத்தத்திலும், மறுவாழ்வுக்கான முன்னெடுப்புகளிலும், சிறைவாசிகளின் நலனிலும் கூடுதல் அக்கறையுள்ள அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. ஏனென்றால், சாதாரணமாக இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களை உயர்த்துவது என்பது வேறு. ஆனால், உடைந்துபோன மனிதர்களை, Broken Men என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பக்கத்துணையாக இருந்து அவர்களுடைய நல்வாழ்வை உறுதி செய்வது என்பது வேறு. இது ஒரு மிகவும் சவாலான பணி.
சிறையை நாங்கள் எப்போதுமே தண்டனைக்குரிய இடமாகப் பார்ப்பதில்லை. இதனை சீர்திருத்தத்திற்கான ஒரு இடமாகத் தான் இந்த அரசு பார்க்கின்றது.
ஒருநொடி பொழுதில் ஏற்பட்ட கோபம் காரணமாக குற்றம் செய்து சிலர் தண்டனைப் பெற்றிருக்கலாம். அல்லது சூழ்நிலைகள் காரணமாக சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள் ஏற்பட வேண்டும். அதனால், சிறையில் இருப்பவர்களுக்கு செய்யப்பட்ட வசதிகளைவிட, சிறையில் இருந்து வெளியே செல்பவர்களின் நலனிலும் அக்கறை உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிறைவாசம் முடித்து விடுதலையாகி வெளியே செல்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவிடும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பொருளாதார ரீதியான உதவிகள் செய்வது தான் உண்மையிலேயே முழுமையான சமூக சீர்திருத்த நடவடிக்கையாகும்.
இதற்காக தொடங்கப்பட்டது தான், இந்த தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கம் நம்முடைய மாநிலத்தில் மட்டும் தான் இருக்கின்றது என்பது கூடுதல் சிறப்பு. இந்த நலச் சங்கம் 1921-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தாலும், இதுவரை இந்த சங்கத்தின் வரலாற்றிலேயே இரண்டே முதலமைச்சர்கள் தான், இச்சங்கத்தின் நிகழ்ச்சிகளில், மேடையில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை ஆற்றியுள்ளார்கள்.
அதேபோல், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகள் 660 பேருக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் உதவித் தொகையை இதே மேடையில் வழங்கினார்கள்.
இன்றைக்கு விடுதலை பெற்ற, 750 சிறைவாசிகளுக்கு 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்படும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கின்றேன்.
இந்த உதவியினைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அனைவரும் கடந்த காலத்தை மறந்து, எதிர்காலத்தை மட்டும் சிந்தித்து, உங்களுடைய குடும்ப நலனை மட்டும் சிந்தித்து, உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுடைய நலனை மட்டும் சிந்தித்து, நல்லவண்ணம் உங்கள் வாழ்க்கையில் முன்னுக்கு நீங்கள் வர வேண்டும். உங்களுக்கு தரப்படுகின்ற அந்த நிதியை ஒரு நல்ல வழியில் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு என்றென்றைக்கும் உங்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும்.
நம்பிக்கையோடு செல்லுங்கள். புதிய உலகத்தைப் பாருங்கள் என்று கூறி, இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த அண்ணன் ரகுபதி அவர்களுக்கும், வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.