திருச்செங்கோட்டில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு- பரமத்தி சாலையை கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட அமைச்சர் எ.வ.வேலு 59.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓமலூர் டூ சங்ககிரி, திருச்செங்கோடு டூ பரமத்தி சாலைகளை நான்கு வழி சாலையாக அகலப்படுத்து பணிகளை அடிக்கல் நாட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "அமெரிக்க அதிபர் கென்னடி அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றதற்கு முழுமுதற்காரணம் நெடுஞ்சாலை துறை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், தமிழ்நாட்டின் சாலைகள் சிறப்பாக வளர்ச்சி பெற்றால் தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற இயலும்.
சாலைகள் வளர்ச்சி பெற்றால் தான் வேளாண் உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த இயலும். தொழிற்சாலை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த சாலை வளர்ச்சி என்பது மிகவும் இன்றியமையாததாகும். வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் தான் பயணிக்க முடியும். அந்த வகையில் விமானம் மற்றும் போக்குவரத்து வசதியைப் பெற சாலை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”அமெரிக்க அதிபர் கென்னடி” கூறியது போல், பொருளாதார வளர்ச்சிக்கு சாலை முக்கியம் என்பதன் அடிப்படையில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் தாலுகா தலைமையகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகள் 2200 கிமீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2021-22 ஆம் நிதியாண்டில் 253.62கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. 2022-23 ஆம் நிதியாண்டில் 157.10 கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. 2023-24 ஆம் நிதியாண்டில் 166.22கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் நிதியாண்டில் 254.32கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் விபத்துகளை குறைக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் முறையில் சிறப்பு தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் புறவழிச்சாலை ரூ.207 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்ற வருகின்றன. அதே போன்று திருச்செங்கோடு புறவழிச் சாலை ரூ.124 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 1281 தரைமட்ட பாலங்களை தரம் உயர்த்த உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தரைமட்ட பாலங்கள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது"என்று கூறப்பட்டுள்ளது.