தமிழீழ விடுதலை புலிகள் பதுங்கியிருந்த இடம் உள்ளிட்ட தகவல்களை சிங்கள அரசுக்கும், பன்னாட்டு அரசுக்கும் சீமான் வழங்கியுள்ளார் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் காந்தி, "தமிழீழ விடுதலை புலிகள் பதுங்கியிருந்த இடம் உள்ளிட்ட தகவல்களை சிங்கள அரசுக்கும், பன்னாட்டு அரசுக்கும் சீமான் வழங்கியுள்ளார். சீமான் ஈழத்துக்கு சென்றுவந்த பின்னரே அங்கு பெரும் அழிவு நடந்தது.தமிழ் சமூகத்தையும், இளைஞர்களையும் ஏமாற்றியவர் சீமான். ஈழ போராட்டத்தின் காலத்தில் போராட்டத்திற்கு வராமல், சினிமா படப்பிடிப்புக்கு சென்றவர் சீமான். 3 மாதத்தில் ஒரு போராட்டத்தில் மட்டுமே சீமான் கலந்துக்கொண்டார்.
இப்போது சீமான் குறித்து வெளியாகும் ஆதாரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்திருக்கும் பேட்டியும், ராஜ்குமாரர் என்றவர் கொடுத்திருக்கும் பேட்டியும், சீமான் பிரபாகரனுடன் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெட்டி ஒட்டப்பட்டது என்று அம்பலமாகியுள்ளது. பிரபாகரனுடன் சந்தித்தற்கான புகைப்படங்கள் இதுவரை வெளியே வரவில்லை. இதற்கான வீடியோ ஆதாரங்கள் வைத்திருப்பதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறியுள்ளார்.
சங்ககிரி ராஜ்குமரனும் இந்த புகைப்படத்தை நான்தான் எடிட் செய்தேன் என்று கூறுகிறார். இதை எங்களுக்கு அச்சத்தை மட்டுமல்ல தமிழ் மற்றும் தமிழ் ஈழத்திற்கு, உணர்வோடு இயங்கிய எங்களைப் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்களை, பொய் பித்தலாட்டம் அவதூறு பேச சீமான் எங்களுடைய வாழ்க்கையை கெடுத்து இருக்கிறார் .
தமிழ் சினிமாவில் வந்த 'கோ'படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அரசியலில் பின்னாடியில் இருந்து இயக்கி ஒருவர் எப்படி வர முடியும் என்பதை பார்த்திருப்போம். அடிப்படையில் தமிழ் ஈழத்தை அழிப்பதற்கும், தமிழ் சமூகத்தில் மேலோங்கி இருந்த ஈழ ஆதரவையும், சமூகநீதி ஆதரவையும் மட்டப்படுத்துவதற்கு சீமான் என்ற மனிதன் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டார் என்று தெரியும் பொழுது அது மிகவும், கவலை அளிப்பது மட்டுமல்லாமல், யாரை நம்புவது என்ற பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
”நான் சண்டைக் களத்தில் இருந்து துப்பாக்கி பிடித்தேன், என் கையை பிரபாகரன் பிடித்தார்” என்ற கதையை இன்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார் சீமான். மிகவும் கட்டுக்கோப்பாக இயங்கிய ஒரு இயக்கம் தமிழக விடுதலைப் புலிகள். பயிற்சி பெற்ற ஆட்களைத் தவிர யாரும் துப்பாக்கியை தூக்க முடியாது. வெறும் சினிமா ஷூட்டிங்கில் படம் எடுப்பதற்காக மட்டுமே அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று சந்தோஷ் கூறுகிறார். அந்தப் புகைப்படத்தை தமிழ் சமூகத்தில் காண்பித்து, இது நான் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படம் என்று பொய் சொல்ல முடிகிறது என்றால், இவரின் அரசியல் வருகையை சந்தேகம் மட்டுமல்ல, தமிழ் ஈழ அரசிகளை தமிழகத்தில் முழுமையாக சீமான் மழுங்கடிக்க செய்திருக்கிறார்.
பொதுவெளி போராட்டங்களில் ஈடுபடவில்லை. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளராவதற்கு முன்பு, இயக்குனர் சீமான் ஆக இருந்தவர் பொதுவெளி போராட்டத்தில், ஈடுபடவும் இல்லை ஏன் ஈழத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் அவர் கூறவில்லை. ஈழத்தில் இதுதான் நடந்தது என்று செய்தியாளர் சந்திப்பு வைக்கவே இல்லை.
2008 ஆம் ஆண்டில் ஈழ ஆதரவுக்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஈரோட்டில் கைது செய்யப்பட்ட சீமான் கோவை சிறையில் இருந்து வெளியே வந்ததும், இந்த போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். தன்னிடம்தான் ஈழப் போராட்டம் ஒப்படைக்கப்பட்டது என்று அன்று பொய் சொல்லிய சீமான், ஒருவேளை இன மானம் தான் பெரிது , வருமானம் பெரிதல்ல என்று கருதி இருந்தால், நேரடியாக போராட்ட தலத்திற்கு வந்திருக்க வேண்டும்.
நேற்று சந்தோஷ் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் சொல்லியிருக்கிறார், தமிழ்நாட்டில் அடைக்கலமாக தமிழ் ஈழத்திலிருந்து வந்து வேலை செய்து கொண்டிருந்த, விடுதலை புலிபோராளிகளை சீமான் காட்டிக் கொடுத்தார் என்றும் கூறினார். தமிழ் ஈழத்தை நீர்த்து போக செய்திருக்கிறார் சீமான்...
அண்ணி, இட்லிக்குள் ஆமைக்கறி கொடுத்தார், அதை அண்ணன் பிரபாகரன் ஊட்டி விடச் சொன்னார்.. தேக்கு மரத்தை நடுவதற்கே ஒரு லட்சம் தேக்கு மரத்தை நடச் சொன்னார் என்ன பேசிவிட்டு... மான் சுடுவதற்கு தடை இருந்த பொழுது, பிரபாகரன் மானை சுடச் சொன்னார் என்று சீமான் கதைவிட்டு வருகிறார்.
மேலும், ஒரு போராளி கட்டுக்கோப்பு இயக்கத்தில் இருக்கும்போது, நான் அங்கு ஒரு பெண்ணை பார்த்தேன், ரசித்தேன், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன், என்று ஒரு அமைப்பை கொச்சையாக பேசி அவமதித்து வருகிறார்.
ஈழத்திலிருந்து நிதி வருகிறது என்று கூறும் கதையும் பொய். சொந்த நாட்டில் வாழ முடியாமல் சொந்த ஊரில் வாழ முடியாமல், அகதிகளாக போய் நிற்கும் அந்த ஏழைகளிடம் சுரண்டிவிட்டு சீமான் வந்திருக்கிறார். கூலி வேலை பார்க்கும் தொழிலாளி இடம் கூட நான் ஈழத்திற்காக பேசுகிறேன் என சுரண்டி வயிறு கொழுத்து வந்திருக்கிறார் சீமான்.
சீமான் இன்று பெரியார் குறித்து பேசுகிறார். அடுத்தது அம்பேத்கர் குறித்து பேசுவார். பாஜகவின் ஆர்.எஸ்.எஸ். வைக்காத குற்றச்சாட்டை சீமான் வைக்கிறார் என்றால், அவரை இயக்குவதற்கு இங்கு ஏதோ ஒரு அமைப்பு தயாராகி வருகிறது என்று தெரிகிறது. சீமானை நாங்கள் அரசியல் அசிங்கமாக பார்க்கிறோம். தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்று சொல்லியபோது, தமிழ் தனித்த மொழி என்று வென்று காட்டியவர் தந்தை பெரியார். ஆனால் இப்படி எல்லாம் சீமான் பேசுகிறார் என்றால், அவர் ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஆபத்தானவர். சீமான் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலியாக மட்டுமல்ல, அத்தனையும் காட்டிக் கொடுக்கிற ஆளாக இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.