அரசியல்

"ஈழம் குறித்து பொதுவெளியில் பொய் சொல்லியிருக்கிறார் சீமான்"- 'எல்லாளன்' புகைப்பட கலைஞர் அமரதாஸ் !

‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை பொறுப்பாளர் அமரதாஸும் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

"ஈழம் குறித்து பொதுவெளியில் பொய் சொல்லியிருக்கிறார் சீமான்"- 'எல்லாளன்' புகைப்பட கலைஞர் அமரதாஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தந்தை பெரியாரை சீமான் விமர்சித்து பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளவர்கள் சீமானின் பொய்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சீமான் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டியளித்திருந்தார். அதேபோல பிரபாகனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் மற்றும் எல்லாளன் திரைப்படத்திற்காக 7 மாத காலம் விடுதலைப்புலிகளுடன் இருந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ஆகியோர் சீமானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை பொறுப்பாளர் அமரதாஸும் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறியப்பட்டு ஈழப் பயணத்திற்குப் பின்னர் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கும் சீமான் அவர்கள், ஈழப் பயணம் தொடர்பான பொய்களையும் புனைவுத் தகவல்களையும் பொதுவெளியில் அவ்வப்போது பகிர்ந்திருக்கிறார்.

"ஈழம் குறித்து பொதுவெளியில் பொய் சொல்லியிருக்கிறார் சீமான்"- 'எல்லாளன்' புகைப்பட கலைஞர் அமரதாஸ் !

புனைகதைகளை உருவாக்கிப் பிறர் ரசிக்கும் விதத்தில் நடித்து ரசித்து வெளிப்படுத்துவதில் ‘வல்லவர்’ என்று சீமான் அறியப்படுகிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்களால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்படக் குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கான பயண அனுமதியோடு (Visa) இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாகப் பொதுவெளியிற் பொய் சொல்லியிருக்கிறார்.

வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவுசெய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது.

‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தேன்.

அப்போது, ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை சார்ந்த பணிகள் அனைத்தும் எனது பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன.

அத் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களைக் கண்டு ஆவலாதிப்பட்டார். அவற்றோடு தான் இருப்பதுபோல ஒளிப்படங்களை உருவாக்குமாறு வேண்டிக்கொண்டார். அதன் பிறகு, பின்னணியைத் தேர்வுசெய்து அவரை நிறுத்தி வைத்து ஆயுதங்களைப் பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து ஒளிப்படங்களை உருவாக்கினேன். அப்போது அங்கு நிகழ்ந்த அங்கதச் சம்பவங்களை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவர் மூலம், அந்த ஒளிப்படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் பெற்றுக்கொண்டார் சீமான்.

எல்லாளன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஸ் அவர்களுடன் இறுதிப் போர் முடியும் தறுவாயில் சூசை அவர்கள் (கடற்புலிகள் பிரிவின் தளபதி) தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் பதிவைக் கேட்டு வாங்கிய சீமான், பொய்யான தகவல்களோடு அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருக்கிறார். (அதில் சூசை பேசியிருக்கும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.)

தான் உறக்கத்தில் இருந்தபோது தனது தொலைபேசியில் சூசையின் அழைப்பு வந்ததாகவும் தனது உதவியாளர் அந்த அழைப்பில் சூசையுடன் உரையாடியதாகவும் ஒரு புனைகதையைக் கட்டிவிட்டிருக்கிறார் சீமான். சந்தோஸ், சீமானின் உதவியாளர் அல்ல. சூசையுடன் அவர் உரையாடியபோது சீமான் அருகிலேயே இருக்கவில்லை. சூசை, சந்தோஸ் ஆகியோருடன் பழகியிருக்கும் என்னால், அந்த உரையாடலின் ‘உண்மைத்தன்மை’ உறுதிசெய்யப்படக்கூடியது. எல்லாளன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஸ், அத் திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

சூசையின் தொலைபேசி உரையாடல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையிடல் அல்ல. நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் காயப்பட்டிருந்தபோது தனக்குத் தெரிந்த தமிழ் நாட்டு ‘ஆதரவாளர்கள்’ சிலரது பெயர்களை மட்டும் நினைவுபடுத்திப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த உரையாடல், சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை சார்ந்து (context) புரிந்துகொள்ளப்பட வேண்டியது.

சந்தோஸ் வைத்திருந்த உரையாடலின் பதிவைத் தருமாறு கேட்டுப் பெற்றுக்கொண்ட சீமான், அது பற்றிய பொய்யான தகவல்களோடு தன் கட்சி அரசியலுக்கான முதலீடு ஆக்கிக்கொண்டார். கட்சியின் தொடக்க நிகழ்வில் அதை அவர் ஒலிபரப்பியதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை வலிந்து திணிக்கும் வகையிலான சீமானின் பிரயத்தனங்கள் ஆபத்தானவை.

"ஈழம் குறித்து பொதுவெளியில் பொய் சொல்லியிருக்கிறார் சீமான்"- 'எல்லாளன்' புகைப்பட கலைஞர் அமரதாஸ் !

வன்னியில் மட்டுமல்ல, இறுதிப் போர் முடிந்த பிறகு தமிழ்நாட்டிலும் சீமானை நான் சந்தித்திக்க முடிந்தது..ஒரு திரைப்படக் கலைஞராக அறிமுகமாகியிருந்த சீமான், ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருந்தார்.

அவரது ஈழப் பயணம் பற்றி நான் அறிந்திருந்ததாலோ என்னவோ, ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அல்லது தயக்கத்துடன் அப்போது அவர் இருந்ததாகத் தோன்றியது. அவர் கேட்ட முதற் கேள்வி ‘அண்ணனுக்கும் (பிரபாகரன்), சேரா வுக்கும் (சேரலாதன்) என்ன நடந்தது?’ என்பதுதான். அவர்கள் ‘தியாகச் சாவு’ அடைந்துவிட்டமை பற்றிச் சொன்னேன். திரு. கொளத்தூர் மணி, திரு. தியாகு போன்றவர்களையும் அக் காலத்தில் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

சீமானின் ஈழப் பயணம், அவரது அரசியற் செயற்பாடுகளின் போதாமைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன்.

வன்னியில் சீமான் தங்கியிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்கு வந்து சென்ற சிலர் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். அவருடன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சந்திப்பை மையப்படுத்தி, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெறும் உள்நோக்கத்துடன் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் சீமான்.

நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திரிபுபடுத்தியும் நடக்காதவற்றைப் புனைந்தும் சீமான் சொல்லியிருப்பவற்றைப் பகுப்பாய்வு செய்து பட்டியலிடுவது சிரமமான காரியம். பல விடயங்களையும் அவர் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். ஈழப் பயணத்தில் அவரோடு சம்மந்தப்பட்டிருந்த பலர் இப்போது இல்லை. வன்னியில் அவரோடு பழகிய சிலர் அவரது ஆதரவாளர்களாக மாறிப் பொய் சொல்லக்கூடும். அவரது குளறுபடிகளை அறிந்த சிலர் அமைதியாக இருக்கிறார்கள். இக் கட்டுரை சார்ந்த எதிர்வினைகள், அவதூறுகளாகவோ மடைமாற்றக் கருத்துகளாகவோ அல்லாமல் ஆக்கபூர்வமானவையாக வெளிப்படுமாயின் நன்று..

எனக்குத் தெரிந்த விடயங்களையும் நான் சம்மந்தப்பட்டிருந்த நிகழ்வுகளையும் ஒரு சுயாதீன ஊடகராகப் பதிவு செய்வது அவசியம் என்று தோன்றியது.

ஈழத்தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியத்திற்கு மாற்றீடு ஆக முடியாது. ஆனால், இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் பொதுத் தன்மைகள் விவாதிக்கப்பட வேண்டியவை.

சீமானின் சில பேச்சுகளும் நடவடிக்கைகளும், தேசியவாதம் சார்ந்த சிந்தனைகளைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதமாக மடைமாற்றும் வகையில் அமைந்துவிடுகின்றன.பொதுவெளியில் அவர் பேசும் சில விடயங்களும் கேள்விகளை எதிர்கொள்ளும் தோரணைகளும் ஒரு அடிப்படைவாதியாக அவரைக் காண்பித்துவிடுகின்றன. அண்மையிற் கூட, ‘தூய இரத்தம்’ பற்றிப் பேசியிருக்கிறார். அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல் அது. ‘இனத்தூய்மைவாதம்’ சார்ந்த நிலைப்பாடுகள் மானுட விரோதச் செயல்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை.

தமிழ்நாட்டின் அரசியற் சூழல், ஈழத்தமிழ் அரசியற் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழத்தின் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரபாகரனை வலிந்து முன்நிறுத்துவதன் மூலம் புதியதொரு அடையாள அரசியலைக் குறுக்கு வழியிற் கட்டமைக்க விழைகிறார் சீமான்.

சமூகச் சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமி அவர்களையும் ஏனைய சில அரசியற் கட்சிகளையும் அரசியல் சார்ந்த தலைவர்களையும் எதிர்ப்பதற்கான ஆயுதமாகப் பிரபாகரனைச் சீமான் கட்டமைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் ஆரோக்கியமானதல்ல..

பிரபாகரனை மகிமைப்படுத்துவதான தோரணையில், அவரைக் கேடயமாக்கிக் கட்சி அரசியற் களத்தில் முன்நிறுத்தும் சீமானுக்குப் பிரபாகரனின் ‘புகழ் வெளிச்சம்’ மட்டுமே இப்போதைய தேவை. மற்றபடி, பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய திராணியும் நேர்மையும் விடுதலை அரசியல் சார் புரிதலும் சீமானிடம் இல்லை.

தமிழ்நாட்டில் பிரபாகரனைப் ‘பணயம்’ வைத்து, அரசியல் ரீதியாகச் சீமான் தொடரக்கூடிய ‘சூதாட்டம்’ கண்டனத்திற்குரியது.

ஈ. வெ. ரா. போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் பிரபாாகரன் போன்ற போராளிகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நடைமுறைத் தேவைகளுக்கும் சனநாயக விழுமியங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் அமைவாக, எத்தகைய சித்தாந்தங்களும் மேம்படுத்தப்பட வேண்டியவை. மாற்றுக் கருத்துகளையோ அவதூறுகளையோ கண்டு பதற்றமடையாமல் அறிவுபூர்வமாக எதிர்வினையாற்றுவதன் மூலமே ‘எதிர்ப்பு அரசியல்’ நடைமுறைகளைப் பலப்படுத்த முடியும். தனிமனித வழிபாடு’ மற்றும் ‘தனிமனித அவதூறு’ போன்றவை, மானுட இழி செயல்களாகவே பார்க்கப்பட வேண்டியவை. எத்தகைய விடயங்களும் ஆரோக்கியமான வழிமுறைகளில் விவாதிக்கப்படக்கூடியவை.

தனது ஈழப் பயணம் தொடர்பான புனைகதைகளைச் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் இட்டுக்கட்டி வெளிப்படுத்தும் இழி செயலை இனியாவது சீமான் நிறுத்த வேண்டும் "என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories