தமிழ்நாடு

”எங்கள் போராட்ட குணம் என்றும் மாறாது” : திட்டவட்டமாக கூறிய கனிமொழி MP!

நம்முடைய போராட்ட குணம் நம்மிடம் இருந்து போய்விடக்கூடாது என்பதற்காக ஆளுநரை கொண்டு வந்து வைத்துள்ளார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

”எங்கள் போராட்ட குணம் என்றும் மாறாது” : திட்டவட்டமாக கூறிய கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. இதில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி, ”நாட்டில் இன்று இருக்கக்கூடிய அரசியல் சூழலில் யார் யாரோ எதை எல்லாமோ கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏன் உலகளவில் பெயர் பெற்றிருக்கக் கூடிய ஐஐடி கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடியவர் மாட்டின் கோமியத்தில் மருத்துவ சக்திகள் இருக்கிறது என்று ஒரு படித்தவர் பேசிக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் தான் இன்று நாம் ஒரு அரசியலை எதிர்கொண்டிருக்கிறோம். இப்படி இவர்கள் இதையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கக் கூடிய அந்த நேரத்திலே நாம் நம் மொழிக்காக, நம் இனத்திற்காக, இந்த இனத்தின் எதிர்காலத்திற்காக, அடுத்த தலைமுறைக்காக நம்முடைய சுயமரியாதைக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கான ஒரு நிகழ்வாக மொழிப்போர் தியாகிகள் தினத்தை இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களாக நடத்தி வருகிறோம்.

இந்த இனத்தின் பெருமையை பேச வேண்டும் என்றால் சில நாட்களுக்கு முன்னால் 2 ஆயிரம் 3 ஆயிரம் ஆண்டுகள் என்று பேசிக் கொண்டிருந்தோம் சமீபத்தில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்க கூடிய ஒரு புத்தகத்தின் தரவுகளில் அவர் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார். ஏன் முன்பு அவர் பேசும் போது கூட இனிமேல் தமிழ்நாட்டை விட்டுவிட்டு இந்திய வரலாறை எழுத முடியாத என்பார். ஆனால், இப்பொழுது அவர் தந்திருக்கக் கூடிய அந்த தரவுகளுக்கு பிறகு உலக வரலாற்றை தமிழ்நாட்டை விட்டுவிட்டு யாராலும் எழுத முடியாது என்பதை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

இந்த பெருமைக்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய நம்முடைய தமிழ் மொழியை ஆதிக்கம் செய்ய வேண்டும், இந்த மொழியை அழித்துவிட வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு எதிராகத் தான் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம். 1938களில் தொடங்கிய இப்போராட்டம் தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மாணவர்கள் போராட்டமாக, திராவிட இயக்கங்களின் போராட்டமாக, மக்கள் போராட்டமாக ஏன் ஏராளமான சகோதரிகள் கைக்குழந்தைகளோடு சிறைச்சாலை சென்ற ஒரு போராட்டமாக இருந்தது என்றால் அது இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தான்.

இவர்கள் கைக்குழந்தைகளுடன் இருந்ததால் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு விட்டு செல்லுமாறு நீதிமன்றம் கூறியது, ஆனால் நீதிமன்றத்தையே தன்னுடைய பிரச்சார மேடையாக மாற்றி நாங்கள் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை இந்தியை எதிர்க்கிறோம் என்று கைக்குழந்தைகளோடு சிறைக்கு சென்ற வரலாறு நமக்கு இருக்கிறது.

ஒன்றிய அரசு ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தி மொழி திணிப்பை இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மொழி திணிப்பு என்பது நாம் எதிர்த்த அந்த மொழி நம் மீது திணிக்கப்படும் போது அதை எதிர்க்கிறோம் என்பது இல்லை. ஒரு மொழி நம் மீது திணிக்கப்படும் போது நாம் முதலில் நம்முடைய மொழியையும், அந்த மொழிக்கான மரியாதையும் குறைக்கப்படுகிறது.

தமிழுக்கு மரியாதையில்லை என்றால் தமிழை பேசக்கூடிய மக்களுடைய நிலை என்ன, மக்களுக்கான நியாயம் நியாயமாக கிடைக்க வேண்டிய இடம் கிடைக்கவில்லை என்றால் நம்முடைய எதிர்காலம், நம் சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதற்காக தான் இந்தி திணிப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியாரிலிருந்து, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இன்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை இந்த இந்தி எதிர்ப்பு என்ற அந்தப் போராட்டத்தை எந்த காலத்திலும் கைவிடாமல் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் இந்த இனத்தை, இந்த மக்களை நம்முடைய எதிர்காலத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற அந்த ஒரு எண்ணத்தோடு நமக்கு அரணாக நிற்கக்கூடியது நம்முடைய மொழி என்ற அந்த உணர்வோடு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

பாராளுமன்றத்தில் நாங்கள் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதும் போது ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறோம். ஆனால், இந்த ஒன்றிய அரசு அமைச்சர்களான எங்களுக்கு இந்தியில் கடிதம் எழுதுகிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த ஆதிக்க மனப்பான்மை, யாராக இருந்தாலும் இந்தி தெரியவில்லை என்றால் என்னுடைய பதில் உனக்கு கிடைக்காது என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு மனப்பான்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்திருக்கிறது, அதில் நம்முடைய முதலமைச்சரும், திமுகவும் தெளிவாக இருக்கிறது. ஏனென்றால், நம்முடைய கல்விக் கொள்கையில் ஒரு மாணவன் இருந்தாலும் அவனுக்காக அந்த பள்ளிக்கூடத்தை செயல்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முதலில் இந்தியை திணிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்தபடியாக அதிக மாணவர்கள் இருந்தால் மட்டுமே பள்ளியை இயக்க வேண்டும் என சில பேருக்கு கல்வி, சில பேருக்கு கல்வி இல்லை என்பதை கொண்டு வர முயற்சிக்கிறது. அதுதான் விஸ்வகர்மா திட்டம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் பட்டங்களை அங்கீகரிக்க மாட்டோம் என ஒன்றிய அரசு கூறுகிறது. அவர்கள் யார் நம்மை அங்கீகரிப்பதற்கு, இன்னும் 50 சதவீத உயர்கல்வியை தொடுவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும் எனக் கூறி வருகின்றீர்கள், நாங்கள் அதை கடந்து விட்டோம். அதை, கடந்து வந்த மாநிலம் தமிழ்நாடு.

தலைவர் கலைஞர் தனது ஆட்சி காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி இருக்க வேண்டும் என அனைத்து பகுதிகளிலும் அரசு கல்லூரிகளை உருவாக்கி கொடுத்துள்ளார். ஆனால் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து அதை ஏற்றால்தான் பட்டத்தை அங்கீகரிப்போம் என கூறுகிறார்கள். அதே போன்று, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதியையும் வழங்க மறுக்கின்றனர். ஆனால், அவர்கள் நிறுத்தி வைத்த பிறகும் நம்முடைய முதல்வர் என்ன செய்தாலும் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் உங்களால் முடிந்ததை பாருங்கள் என பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு இடத்திலும் மொழியை கொண்டு வந்து திணிக்கிறார்கள். ஒரு மொழியை திணிக்கும் போது அவர்களுடைய கலாச்சாரம், அவர்களுடைய சிந்தனைகளை எளிதாக நம் மீது திணிக்க முடியும். இங்கு பல்வேறு மதங்கள், பல்வேறு நம்பிக்கை இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிறுபான்மை மக்களை பாதுகாக்க கூடிய மாநிலம் தமிழ்நாடு. வக்பு வாரிய சொத்துக்களை பிடுங்குவதற்காக ஒன்றிய அரசு இரு மசோதாவை கொண்டு வந்து அதன் வழியாக வக்பு வாரிய சொத்துக்களை கைப்பற்றி அதனை அம்பானிக்கும், அதானிக்கும் கொடு கொடுக்க நினைக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்துள்ளனர், எதற்காக என்றால் அதிபர் தேர்தல் முறையை இங்கு கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் ஜனநாயகத்தை முற்றிலும் அழித்துவிட்டு, மாநில ஆட்சிகளை கைப்பற்றி தான் நினைத்ததை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது.

”எங்கள் போராட்ட குணம் என்றும் மாறாது” : திட்டவட்டமாக கூறிய கனிமொழி MP!

இதைக் கூறும் உங்களால் எத்தனை மாநிலங்களில் தேர்தல் நடத்த முடியும், என்றால் அதற்கான கட்டமைப்பு இல்லை, அப்புறம் எப்படி இந்த தேசத்துக்கான தேர்தலையும், ஒரு மாநிலத்திற்கான தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியும். நாட்டின் ஜனநாயகத்தை முற்றிலும் ஒழித்து விட வேண்டும், அழித்து விட வேண்டும், எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு காலம் காலமாக துணை போய்விட்டு, தேர்தலுக்கு முன்பாக ஒட்டுமில்லை உறவுமில்லை என கூறுகிறது அதிமுக.

ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை நிறுவ முயற்சிக்கும் முன்பாக நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதாவை கொண்டு வந்த போது நாம் எதிர்த்தோம். ஆனால், அதிமுகவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆதரவாக பேசிவிட்டு, தற்போது எடப்பாடி பழனிசாமி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசுகிறார். இதற்கு அதிமுக அன்று எதிர்த்திருந்தால் இந்த சுரங்கமே இன்று வந்திருக்காது, அன்றொரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது அதிமுகவின் வழக்கம். ஆனால், மக்கள் அதை மறக்க மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

திடீரென உணர்ச்சிவசப்பட்டால் தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் அண்ணாமலை இதற்கும் அடித்துக் கொள்வார் என நினைத்தேன் ஆனால் இல்லை. டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வந்தது பாஜக. அதனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது நம்முடைய திமுக அரசு, போராடியது நம் மக்கள். நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் அமைக்க விட மாட்டேன் என முதல்வர் கூறிய பின்பு, அந்த சுரங்கத்தை கைவிட்டுவிட்டு தற்போது அவர்களாகவே முன்வந்து டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட்டது போல் பாவனை செய்து வருகின்றனர்.

இப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வரக் கூடிய அரசு தான் பாஜக அரசு. சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டம், கனிம வள சட்டம் என அனைத்து சட்டத்திற்கும் பாஜகவுக்கு அவர்கள் கூறுவதற்கெல்லாம் தலையாட்டி விட்டு இன்று நியாயவாதி போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

ஒருமுறை ஜெயலலிதா கூறினார், சில பாஜக தலைவர்களுக்கு மறதி நோய் உள்ளது என்று. ஒருவேளை அந்த வியாதி எடப்பாடிக்கும் வந்து விட்டதா என்று சந்தேகமா உள்ளது. ஏனென்றால், அவர் நினைத்தபோது மறதி நினைத்தபோது நினைவு என்ற ஒரு நிலையில் நின்று கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

நமக்கு சுயமரியாதை கற்றுக் கொடுத்த தந்தை பெரியாரை, ஆண் பெண் என்று எந்த வித்தியாசம் இல்லை நீயும் எழுந்து வா, உனக்கும் எதிர்காலம் இருக்கிறது என்று பெண்களை பார்த்து அறைகூவல் விடுத்த தந்தை பெரியாரை அவமதிக்கிறார்கள். அதிமுகவும் எடப்பாடியும் எங்கே போனார்கள், அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட எடப்பாடி பேசவில்லை.

இங்கு இருக்கக்கூடிய பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் தந்தை பெரியாரை விட்டு விட்டு நான் இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள்.

இப்போது தந்தை பெரியாரை, திராவிட இயக்கத்தை, நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாதவர்கள் இந்த நாட்டில் அரசியல் செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த கனவு கண்டாலும், எத்தனை முறை சாட்டை எடுத்து அடித்துக் கொண்டாலும், எத்தனை முறை நாற்காலிக்கு அடியில் உருண்டு புரண்டாலும் எந்த காலத்திலும் இந்த மண்ணின் மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ளவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.

இன்று தமிழகத்தை எடுத்துக் கொண்டால் எல்லா துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருக்கக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு. எந்த மாநிலத்தில் சென்று பேசினாலும், எப்படி இந்த ஒன்றிய அரசு எதிர்த்து இப்படி தமிழ்நாட்டில் முன்னேற முடிகிறது என்று நம்மை பார்த்து கேட்கிறார்கள்.

ஒன்றிய அரசு மோடி ஆட்சியில், ஜிடிபி வளர்ந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஒன்றை சொல்லுகிறேன் அந்த ஜிடிபியில் ஒன்றிய அரசை விட, தேசிய அளவீட்டை விட, பாஜக ஆட்சியை விட தமிழ்நாட்டில் தான் அதிகமான ஜிடிபி வளர்ச்சி கண்டுள்ளது.

அதேபோல பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வதும், தொழில் முனைவோர்களாக இருப்பதும் தேசிய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிகம். கல்வியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். மாநிலத்தில் அடித்தட்டில் இருக்கக்கூடிய கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத பெண்கள் அவர்களுடைய கல்வி எக்காலத்திலும் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் ஏராளமான பெண்கள் இடையில் நிறுத்தப்பட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை யில் தெரியவந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் மதுரைக்கு உலக தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 10ஆயிரம் பேருக்கு மேல் பணி வழங்கும் வகையில் டைடல் பார்க் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமது முதல்வர் அறிவித்தால் அதை செய்து கொடுப்பார். ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை செய்து கொண்டு அதே நேரத்தில் நம்முடைய இனத்தை, நம்முடைய சுயமரியாதையை, நம்முடைய உரிமைகளை பாதுகாத்துக் கொண்டிருக்க கூடிய ஒரே இயக்கம் திமுக, ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டம் என்பது நாம் கடந்த காலத்தை மட்டுமே நினைவு கூறக் கூடிய கூட்டம் இல்லை. எதிர்காலத்தில் நமக்கு இருக்கக்கூடிய கடமை உள்ளது. ஒவ்வொரு நாளும் அதனை ஞாபகப்படுத்த நமக்கு என்று ஒரு கவர்னர் உள்ளார். அவர் இருக்கும் வரை நம்முடைய அந்த போராட்ட குணம் இருக்கும். அதற்காகவே ஒன்றிய அரசு அவரை இங்கு வைத்துள்ளனர்.

வரக்கூடிய தேர்தல் என்பது நம்முடைய மொழியை, நம்முடைய இனத்தை, அடையாளத்தை காக்கக்கூடிய தேர்தல். அதனை காக்க கூடியவர்கள் யார் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories