சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது, பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர், பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி,"தமிழ்நாடெங்கும் உள்ள பள்ளிகளை சேர்ந்த சுமார் 46 லட்சம் மாணவர்கள் அரசு சார்பில் நடத்தபட்டுள்ள கலைத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
மாணவர்கள் ஒவ்வொருவரின் முகத்தை பார்க்கும் பொழுதும் எதிர்கால கலைஞரின் முகத்தை பார்ப்பது போல் இருக்கிறது. ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக இருக்க அதற்கு கலை உணர்ச்சி இருக்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞருக்கு, எழுத்தாளர், அரசியல்வாதி, முதலமைச்சர் என அடையாளம் இருந்தாலும், ‘கலைஞர்’ என்ற அடையாளமே நிலைத்தது. அதுபோல, இங்கு கூடியுள்ள மாணவ செல்வங்கள் ஒவ்வொருவரும் மிகச்சிறந்த கலைஞர்களாக அடையாளப்படுகிறீர்கள்.
தமிழ்நாட்டில் கல்விக்காக மட்டும் தொடக்க கல்வி முதல் இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கல்வி நிலையங்களில் கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மாணவர்களின் சிந்தனைகளை தூண்டுவதும் முக்கியம். அதற்கான களமாகதான், இந்த கலைத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை மட்டுமே நடந்து வந்த கலைத்திருவிழா, நடப்பாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற கலைத் திருவிழாக்களில் வெற்றி பெற்ற பல மாணவர்கள், இன்றைக்கு பல்வேறு தலங்களில் சாதிப்பதை காண முடிகிறது. அவர்கள் பாடகர்களாக, நடன கலைஞர்களாக, இசை கலைஞர்களாக கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். இச்சாதனைகள் வரும் காலங்களிலும் நீடிக்க இருக்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். திறமைக்கு பரிசாக, வாழ்வின் எந்த முனைக்கும் கொண்டு செல்ல திராவிட மாடல் அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் துணையாக இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.