புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதை மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதை அடுத்து இந்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிற்பகல் 2 15 மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.