தமிழ்நாடு

”இலக்கியப் புனைவுகள் அல்ல, வரலாற்று ஆதாரங்கள்” : உலகுக்கே அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

”இலக்கியப் புனைவுகள் அல்ல, வரலாற்று ஆதாரங்கள்” : உலகுக்கே அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே நான் அறிவிக்கிறேன்.

5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டஅகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டமாதிரிகள் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. புனே நகரிலுள்ள பீர்பால் சகானிதொல்அறிவியல் நிறுவனம்,அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல்ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வுநிறுவனங்களுக்கும்- பன்னாட்டளவில் உயரிய நிறுவனமானஅமெரிக்க நாட்டு புளோரிடா மாநிலத்திலுள்ள

பீட்டாஆய்வகத்திற்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வும் பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப்பகுப்பாய்வும், ஒரே தாழியிலுள்ள மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு ஆய்வுநிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்டமுடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியானமுடிவுகள் கிடைக்கப்பெற்றன. தற்போது கிடைத்துள்ள கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் மற்றும் OSL பகுப்பாய்வு காலக்கணக்கீடுகளின் அடிப்படையில் கி.மு. 3500 முற்பகுதிக்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்று வலியுறுத்துகின்றன.

இந்த பகுப்பாய்வு முடிவுகள் இந்தியாவில் உள்ளதொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் இரும்பின் தோற்றத்தையும் பண்டையதொழில்நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர்பெருமக்கள் ஆவார்கள். அந்த அறிஞர் பெருமக்கள் அனைவரும் இந்தஅவையில் கூடியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரு சேரதமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின்ஆய்வு முன்னெடுப்புகளை வெகுவாகப் பாரட்டியுள்ளனர். இரும்பின் காலம் குறித்தான முடிவுகளுக்கு ஆதரவாகவும்கண்டுபிடிப்பகளை பாராட்டியும் உள்ளனர். இத்தகையபகுப்பாய்வு முடிவுகள் ஆய்வுவாளர்களுக்கு புதிய உத்வேகத்தைஅளித்துள்ளன.

இவை அனைத்தையும் தொகுத்துத்தான் 'இரும்பின் தொன்மை'என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.தேசிய அளவில் தொல்லியலில் நிநிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களிடம் பகுப்பாய்வு முடிவுகள் பற்றிக் கருத்துப்பெறப்பட்டு அந்த அறிஞர்களின் கருத்துகளும் இந்நூலில்இடம்பெற்றுள்ளன.

அகழாய்வு செய்யப்பட்ட இடங்களிலிருக்கும் இரும்புப் பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும் இரும்புத்தாது இருக்கும் தொல்லியல் தளங்களில்எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அகழாய்வுகளும் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும் .சான்றுகளைவழங்கி தெளிவுபெறவைக்கும்.அத்தகைய வலுவானசான்றுகளுக்காக நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்.

இருந்தாலும், அண்மைக்காலஅகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதனைஎண்ணிப் பெருமிதத்துடன் கூறுவோம்.

அதாவது 5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்புஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல்அடிப்படையில் நிறுவியுள்ளோம் என்பதை மட்டற்றமகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவிக்கிறேன். இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை.உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. இந்த ஆய்வுகள் பல்வேறு திருப்பு முனைகளை உருவாக்கி வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories